November 2016


சௌந்தரியங்கள் வாய்க்கும் 'சீலய' அனுஷ்டானங்கள்
November 2016
வணக்கத்திற்கு தயார்படுத்தப்பட்ட மலர்கள்

மனம், வாக்கு, காயம் ஆகிய மூன்றினாலும் தன்னைத்தானே கட்டுப்படுத்தி வாழ்வதே ‘சீலய' என்ற சீலம் ஆகும். இந்தச் சீலத்தை எவ்வாறு கடைப்பிடிக்க வேண்டும்? அதன் வகைகள்? படிமுறைகள்? போன்ற அனைத்தையும் கௌதம புத்தர் உபதேசித்துள்ளார். இல்லறத்தையோ துறவறத்தையோ மேற்கொள்வோர் மொட்டு, பூ, காய், பழம் என உருவகிக்கப்படும் நான்கு வகைச்சீலங்களைக் கடைப்பிடித்து துன்பங்களிலிருந்து விடுதலை பெறமுடியும்.

எழுத்து சுகந்திசங்கர் | படங்கள் மேனக அரவிந்த

கண்ணாடியில் எமது விம்பத்தைப் பார்க்கின்றோம், அந்தக் கண்ணாடி அழுக்காக இருந்தால் எமது விம்பத்தைப் பார்க்க முடிகிறதா? சுத்தமாகத் துடைத்துவிட்டுப் பார்த்தால்த்தான் அதில் எமது விம்பம் தெளிவாகத் தெரியும். சுத்தமாகத் துடைத்த கண்ணாடிதான் என்றாலும் அது ஆடிக்கொண்டிருந்தால் விம்பம் விளங்காது. கண்ணாடி சுத்தமாகவும் இருக்க வேண்டும், ஆடாமலும் இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் கண்ணாடியில் எமது விம்பம் தெளிவாகத் தெரியும். எமது மனமும் கண்ணாடி போன்றது. அதில் அழுக்குகளும் நிலையற்ற தன்மையும் இருந்தால் கெட்ட எண்ணங்களும் கெட்ட செயல்களும் தோற்றம் பெறும். மனதில் தீயஎண்ணங்களும் தீயசெயல்களும் இல்லாத போதுதான் நல்லொழுக்கம் அல்லது நன்னடத்தை வெளிப்படும். இதையே 'சீலம்' என்கின்றோம். சீலம் என்பதற்கு ஒழுக்கம் என்று பொருள். மனம், வாக்கு, காயம் ஆகிய மூன்றினாலும் எம்மைக் கட்டுப்படுத்தி வாழ்வதே சீலம் ஆகும். இந்த ஒழுக்க நெறியை சிங்கள மொழியில் 'சீலய' என்கிறார்கள். 'சீலய' என்பது 'சீலா' என்ற பாளி மொழிச் சொல்லிலிருந்து பிறந்ததாகும். கௌதம புத்தரினால் பேசப்பட்ட மொழி பாளி மொழியாகும். கௌதம புத்தர் உலக மக்கள் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்க நெறிகளைக் குறிப்பதற்கு 'சீலா' என்ற வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளார்.


உலகியல் அடிப்படையில் மனிதன் ஒரு விலங்கு, அவன் தவறு செய்பவன், பின்னர் அதற்கான தண்டனையை அனுபவிப்பவன். அவன் தவறுகள் செய்யாமலும் தண்டனைகளை அனுபவிக்காமலும் இருப்பதற்கு வழிகாட்டுவதை அல்லது நெறிப்படுத்துவதையே உலகில் உள்ள அனைத்து மதங்களின் உட்கருத்தாகவும் அமைந்துள்ளது. பௌத்தம், வாழ்க்கைத் தத்துவங்களையே கோட்பாடுகளாகக் கொண்டிருந்தாலும், அதன் வழிபாட்டு மரபில், தவறுகளைச் செய்யத் தூண்டும் சிந்தனைகளைக் களைவதற்கும் மனிதனை ஒழுக்க நெறிகளின்பால் இட்டுச் செல்வதற்கும் இந்தச் 'சீலம்' எனும் அனுஷ்டான முறை பௌத்த குருமார்களாலும் இல்லறவாசிகளாலும்; பின்பற்றப்பட்டு வருகின்றது. வருடத்தின் ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் சீலம் அனுஷ்டிக்கப்படவேண்டும் என்பது பௌத்த மதத்தினைப் பின்பற்றுவோர் ஒவ்வொருவரினதும் கடமையாகும்.


கௌதம புத்தரின் வாழ்க்கையில், அவருடைய பிறப்பு, துறவு, புத்தத்துவம் பரிநிர்வாணம் ஆகியவை அனைத்தும் முழுமதி நன்நாளிலேயே நிகழ்ந்திருக்கின்றன. இதனால் பௌர்ணமி தினம் புனிதமானதும் சிறப்பானதுமான தினமாக இலங்கையில் கருதப்படுகின்றது. அன்றைய தினம் அரசாங்க. வங்கி, வர்த்தக விடுமுறை தினமாக இலங்கை அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த தினத்தில் மதுபான விற்பனையிலோ இறைச்சி விற்பனையிலோ ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றமாகவும் சட்டத்தினால் குறிப்பிடப்பட்டுள்ளது. பூரணை தினத்தில் பௌத்த சமயத்தினர் ஒவ்வொருவரும் சீலம் நோற்க வேண்டும் என்பதற்காகவே அரசாங்கம் இத்தகைய வழிமுறைகளைச் செய்துள்ளது.

கௌதம புத்தரின் வாழ்க்கையில், அவருடைய பிறப்பு, துறவு, புத்தத்துவம் பரிநிர்வாணம் ஆகியவை அனைத்தும் முழுமதி நன்நாளிலேயே நிகழ்ந்திருக்கின்றன.


பௌத்த சமயத்தில் சீலய அனுஸ்டானம் முக்கியமாக நான்கு வகைப்படும். முதலாவது, இல்லற வாழ்க்கையைக் கடைப்பிடிப்போருக்கான 'பஞ்ச சீலம்' என்பதாகும். இதில் ஐந்து வகை ஒழுக்க நெறிகள் கடைபிடிக்கப்படும். எந்த ஓர் உயிரினத்துக்கும் தீங்கு செய்யாமலும் அதனைக் கொல்லாமலும் இருப்பதுடன் அதனுடன் அன்பாகவும் இருத்தல், பிறர் பொருள்மீது ஆசைப்படாமலும் களவு செய்யாமலும் இருத்தல், முறை தவறிய சிற்றின்பத்தை நீக்குதல், உண்மை பேசுதல், அதாவது பொய் பேசாதிருத்தல், மயக்கத்தையும் சோம்பலையும் தருகின்ற மதுவகைகள், போதைவஸ்துகளை உள்ளெடுக்காதிருத்தல் ஆகிய அம்சங்கள் பஞ்ச சீலத்தில் அடங்குகின்றன.


இரண்டாவது, இல்லற வாழ்க்கையைக் கடைப்பிடிக்கும் இல்லற வாசிகள் பௌர்ணமி தினத்தில் விகாரையிலோ பன்சலையிலோ அல்லது வீட்டிலோ அனுஷ்டிக்கும் சீலம் 'அட்டசீலய' (எட்டு ஒழுக்க நெறிகள்) ஆகும். அன்றைய தினத்தில் மேற்குறிப்பிட்ட ஐந்து சீலங்களுடன் சுவையான உணவினைத் தவிர்த்தல், சொகுசான நித்திரையைத் தவிர்த்தல், வாசனைகளைத் தவிர்த்தல் ஆகியவற்றையும் மேலதிகமாகச் சேர்த்து எட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடிப்பார்.


மூன்றாவது, 'தசசீலய' (பத்து ஒழுக்க நெறிகள்) என்பது பௌத்த பிக்கு அல்லது பிக்குனி தமது துறவு வாழ்க்கையில் கடைப்பிக்க வேண்டிய கட்டாய ஒழுக்க நெறிகளாகும். ஒரு பிக்கு அல்லது பிக்குனி பத்து சீலங்ளைக் கடைப்பிடிப்பதன் மூலம் 'உபசம்பதா' என்ற நிலையை அடைகின்றார். இந்த நிலையை அடைந்த பின்னர், அனுஷ்டிக்கவேண்டிய நான்காவது சீலம் 'ப்ராதிமோக் ஷ' சீலமாகும். இது இந்திரியங்களைக் கட்டுப்படுத்தும் ஒழுக்க நெறியாகும்.


முழுமதி தினத்தில் சீலய அனுஷ்டான வழிபாடுகளில் ஈடுபடும் பௌத்தர்கள், அதிகாலையிலிருந்தே அனுஷ்டானங்களில் ஈடுபட ஆரம்பித்துவிடுவார்கள். இந்த வழிபாடுகள் மாலை வரை தொடரும். வெசாக் தினத்தில் விசேடமாக மறுநாள்வரை தொடரும்.


சுத்தமான வெள்ளை ஆடை அணிந்து, ஆண்களும் பெண்களும் சிறுவர்கள், வயோதிபர்கள் என்ற வயது வேறுபாடின்றி சீலம் அனுஷ்டிப்பார்கள். அகத்தைச் சுத்தப்படுத்தும் கைங்கரியத்தில் ஈடுபடும்போது, புறச்சுத்தத்தை வெளிப்படுத்தும் வெள்ளை ஆடை அணிவது மரபாகும். முழுமதி தினத்தில், விகாரை மற்றும் பன்சலை ஆகிய பௌத்த புனிதஸ்தலங்களின் சூழல், நீலம், மஞ்சள், சிவப்பு, வெள்ளை, செம்மஞ்சள் ஆகிய நிறங்கள் கொண்ட பௌத்தக் கொடிகளினால் அலங்கரிக்கப்பட்டு, ஒலிபெருக்கியில் 'பண" எனப்படும் 'தர்ம உபதேசம்" ஓலிக்கவிடப்படும். அன்றைய தினத்தில் பௌத்தர்கள் வாழும் ஊர்களில் ஓர் ஆத்மீகக் களை குடிகொண்டிருக்கும்.

முழுமதி தினத்தில் விகாரையில் அல்லது வீட்டில் ‘அட்டசீலய’வைக் கடைப்பிடிக்கும் ஒருவர், தனது அன்றாட வாழ்க்கையில் ‘பஞ்சசீலய’ ஒழுகுதலை பௌத்தம் வலியுறுத்துகின்றது


'பண' என்பது புத்தர் மொழிந்த தர்மபோதனைகள், பௌத்த குருமார் மூலம் மக்களுக்கு உபதேசம் செய்யப்படுவதாகும். பௌர்ணமி தினத்தன்று, இலங்கை பத்திரிகைகளில் புத்தரின் தர்மபோதனைகள் தொடர்பான கட்டுரைகள் பிரசுரிக்கப்படுவதுடன், தொலைக்காட்சி, வானொலிகளில் கலந்துரையாடல்கள், பௌத்த மதகுருமாரின் தர்ம உபதேசங்கள் ஒளி, ஒலிபரப்பப்படும். எல்லோரும் அன்று மாமிச உணவைத் தவிர்த்து, தாவர உணவு வகைகளையே உட்கொள்வார்கள்.


முழுமதி தினத்தன்று, சீலம் அனுஷ்டிக்கும் பக்தர்கள்; தாமரை மலர்கள், வெள்ளை மலர்களை புத்தபிரானின் பாதக் கமலங்களில் வைத்து வணங்குவது சம்பிரதாயம் ஆகும். வெள்ளை மலர்கள் குற்றமற்ற தன்மையையும் பணிவு மற்றும் தூய்மையையும் பிரதிபலிக்கும். செம்மலர் பாரம்பரியத்தினை வெளிப்படுத்தும். அதன் பின்னர் மாலைவரை அங்கேயே தங்கியிருக்கும் பக்தர்கள், அங்கு இடம்பெறும் தர்ம உபதேசங்களைச் செவிமடுப்பதுடன் எட்டுவகைச் சீலங்களைக் கடைப்பிடிப்பார்கள்.


இவ்வாறு விகாரையில் 'அட்டசில்' எனப்படும் எட்டு சீலங்களைக் கடைப்பிடிக்கும் ஒருவர், தனது அன்றாட வாழ்க்கையிலும் பஞ்ச சீலம் எனப்படும் ஐந்து வகைச் சீலங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று பௌத்த நெறிமுறை வலியுறுத்துகின்றது. சாதாரணமாக இல்லற வாழ்வில் ஈடுபட்டிருப்போர், இவற்றைக் கடைப்பிடித்து வாழ்வார்களேயானால் அவர்களால் மனம், வாக்கு, காயம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தி உலகத்தில் எல்லாச் செல்வங்களையும் அடைய முடியும். பௌத்த குருமார் மட்டுமல்லாமல், ஓர் இல்லறவாசி கூட தாம் விரும்பின் 'ப்ராதிமோக் à®·' à®šà¯€à®²à®¤à¯à®¤à¯ˆà®¯à¯à®®à¯ கடைபிடிக்கலாம்.


பௌத்த மக்கள் மட்டுமல்ல உலகில் வாழும் மனிதர்கள் அனைவரும் கூட இத்தகைய ஒழுக்க நெறிகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற உண்மையை இச்சீல அனுஷ்டானம் உணர்த்துகின்றது. இவ்வொழுக்க நெறிகள் யாவருக்கும் பொதுவானவையே. ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்க சீலங்களே இவை. மனிதனிடத்தில் சீலம் குடியேறினால் தருமம் குடிபுகும், தருமம் குடிபுகுந்தால் சத்தியம் குடிபுகும், சத்தியம் குடிபுகுந்தால் சிறப்புகள் (கடாட்சம்) குடிபுகும். எனவே, சீலம் உள்ள இடத்தில் தான் எல்லா சௌந்தரியங்களும் சீரும் சிறப்பும் வந்து சேரும். இத்தகைய வாழ்க்கையை வாழ்வதற்கான நெறிமுறையைத்தான் பௌத்தம் 'சீலய' என்ற சீலத்தினூடாக வழிகாட்டுகின்றது.


(இந்தக் கட்டுரைக்கான ஆலோசனையை பௌத்த பாளி பல்கலைக்கழக விரிவுரையாளர் நாராயணன் மல்லிகாதேவி அவர்கள் வழங்கி உதவியிருந்தார்).


Ata sil or the eight precepts is observed by Buddhists on Poya day. Devotees clad in white and an uthuru saluwa (shawl) meditate on the philosophy of the Buddha at temples from morning till evening.

 

 • image01
  image01

  உணர்வையும் உடலையும் இறைவனுக்கு அர்ப்பணம் செய்யும் 'சீலய' நோற்றல்

  Prev Next
 • image01
  image01

  வெள்ளை ஆடையில் புறச்சுத்தம் வெளிப்படும். சீலம் நோற்றல் அகச்சுத்திற்கு வழிகாட்டும்.

  Prev Next
 • image01
  image01

  விகாரையில் தொண்டு செய்தல் சீலம் நோற்றலில் ஓர் அம்சமாக அமைகின்றது

  Prev Next
 • image01
 • image01
  image01

  புத்தரின் உபதேசங்களைப் படிப்பதும் கேட்பதும் சாலச்சிறந்தது

  Prev Next
 • image01
  image01

  தர்மஉபதேசம் நிகழ்த்தப்படுகின்றது

  Prev Next
 • image01
  image01

  'அட்டபிறிகர' எனப்படும் புனிதப்பொதியைத் தேரருக்கு தானம் வழங்கும்முன் அடியார்களினால் அர்ச்சிக்கப்படுகின்றது

  Prev Next
 • image01
  image01

  'அட்டசீலய' நோற்போர் தானமாகப் பெறும் உணவை உண்பது புண்ணியம்

  Prev Next