January 2017


மொக்டெயில் அல்கஹோல் இல்லாத பானம்
January 2017
உடல் நலமும் மன ஆரோக்கியமும் பேணும், உடனடியாகத் தயார் செய்யப்படும் பானங்கள்


எழுத்து சுகந்திசங்கர் | படங்கள் வி~;வதன் தர்மகுலசிங்கம்


காட்டில் இலைகுழை தரித்து, விலங்குகளாக அலைந்து திரிந்த காலம் முதல், இன்று வரையான மனித குலத்தின் நாகரிக வளர்ச்சிப் போக்கில் மதுபானத்தை ஒன்றிலிருந்து வேறொன்றாகத் தனியாகப் பிரித்தெடுத்து, ஒன்றில்லாமல் ஒன்று வளர்ந்ததாகப் பார்க்க முடிவதில்லை. விரும்பியோ விரும்பாமலோ ஒன்றின் வளர்ச்சியினுள் மற்றொன்று பின்னிப்பிணைந்தே வளர்ச்சியடைந்து வந்துள்ளது.


மனித மனம் எப்பொழுதும் விரும்புவது குதூகலத்தையும் புத்துணர்வையும் விதிவிலக்காக போதையையும் ஆகும். இவற்றை சூழ்நிலைக்கு ஏற்றவாறு மதுபானம் தந்துவிடுவதால், அது உலகத்தில் பணத்துக்கு அடுத்தபடியாகச் செல்வாக்குச் செலுத்தும் காரணியாகத் திகழ்கின்றது.


ஆனால், உலகத்தில் சுவாசித்தல், உணவு உட்கொள்ளல் போன்று அனைவரும் இந்த மதுபானத்தை பருகுவது கிடையாது. உலக சுகாதார ஸ்தாபனத்தின் 2014 ஆம் ஆண்டின் அறிக்கையின்படி, உலக மொத்த சனத்தொகையில் 45 சதவீதமான ஆண்கள் மதுபானம் பருகுவதில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


ஆனால், சமூக ஒன்றுகூடல்களின் போதும் வேலைப்பழுக்களின் நிமித்தம் புத்துணர்ச்சிக்காகவும் மதுபானம் அருந்துவது நாகரிகமானதும் கௌரவமானதுமான நடத்தை பின்பற்றப்பட்டு வருகின்றது.


சமூக ஒன்றுகூடல்களின் போது ~கொக்டெயில்| எனும் முறையில் மதுபானம் வழங்கப்படுவது பாரம்பரிய மரபாகக் கைக்கொள்ளப்பட்டு வருகின்றது. ~கொக்டெயில்| எனும்போது, மது உட்பட மூன்றுவகையான பானங்களும் அதற்கு மேற்பட்டவைகளையும் ஒன்றுடன் ஒன்று கலந்து பருகுவது ஆகும். மது உட்பட இரண்டு வகையான பானங்களை ஒன்றுடன் ஒன்று கலந்து பருகுவது ~லோங்றிங்| எனப்படுகின்றது. ஆனால், மதுசாரம் எனப்படும் ~அல்கஹோல்| இல்லாத பானம் என்று சொல்லக்கூடிய பானவகையாக ~மொக்டெயில்| காணப்படுகின்றது. மதுபானம் அருந்தாதவர்கள், விருந்துபசாரம், சமூக ஒன்றுகூடல்களின்போது இதனை கௌரவத்துடனும் பெருமையுடனும் அருந்துகின்றார்கள்.


மதுபானம் அல்லது கொக்டெயிலில் கலந்துகொள்ள விருப்பமின்மை, சமய நம்பிக்கைகள், ஆரோக்கியக்கேடு, ஒழுக்கசீர்மை, தாய்மையானோர் போன்ற காரணங்களினால் ஒருவர் மதுப்பாவனையைத் தவிர்ப்பதற்கான காரணங்கள் உண்டு. சமூக ஒன்றுகூடல்களில், அனைவரும் மது அருந்தும்போது, தம்மையறியாமலேயே ஒருவித தாழ்வுமனப்பான்மை உணர்வை மது அருந்தாதவர்கள் அனுபவிக்கின்றார்கள் என்கிறது உளவியல் ஆய்வு ஒன்று.


இத்தகையவர்கள் கொக்டெயில் பார்ட்டிகளின்போது மொக்டெயில் எனும் பானவகையை அருந்துவது, பண்பானதும் ஒழுக்கசீர்மை மிக்கதும் கௌரவமானதுமாகக் கருதப்படும் நாகரிக முறைமை தற்போது ஏற்பட்டு வருகின்றது.


கொக்டெயிலின் போது என்று மட்டுமல்ல, கணவன், மனைவி, பிள்ளைகள் என குடும்பமாக, குதூகலமாகப் பொழுதைப் போக்குவதற்காக ~ரெஸ்ரோரன்ட்| செல்கின்றார்கள் என வைத்துக்கொள்வோம். குடும்பத்துடனான அந்தச் சூழ்நிலையில் கொக்ரெயில் மதுபானங்களை அருந்த முடியாதே! இத்தகைய சூழ்நிலையில் குதூகலத்தையும் புத்துணர்ச்சியையும் தரும் பானவகையாக இந்த மொக்டெயில் பானங்கள் திகழ்கின்றன. பெரியவர்கள், சிறுவர்கள், ஆண்கள், பெண்கள், நோயாளிகள், கர்;ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார் என்ற எந்த வேறுபாடுகளும் இன்றி அனைவரும் பருகக்கூடிய பானமாக இவை காணப்படுகின்றன.


பொதுவாக மொக்டெயில் இயற்கையான பழச்சாறு, காய்கறிச்சாறு, இயற்கையான சுவையூட்டிகள், மணமூட்டிகள் போன்ற வற்றினால் தயார் செய்யப்படுவதனால், ஆரோக்கிய பானமாகவும் கருதமுடியும். மொக்டெயில் பானவகைகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையான பானவகைகள்தான் காணப்படுகின்றன என வரையறுக்க முடியாது. சேர்மானப் பொருட்களுக்கு ஏற்ப நிறத்திலும் மணத்திலும் குணத்திலும் சுவையிலும் இவை வேறுபடுகின்றன. மதுபான வகைகள்போல் போத்தல்களில் அடைத்து விற்பனை செய்யப்படும் மொக்டெயில் பானங்கள் கிடைக்கப் பெற்றாலும், இலங்கையில் பிரபல்யமான ஹோட்டல்களில் மொக்டெயில் பானங்கள் உடனடியாகத் தயார்செய்து வழங்கப்படுவது குறிப்பிடத்தக்க விசேட அம்சமாகும்.


ஏனெனில், புத்துணர்ச்சியையும், நிம்மதியையும், உன்னதங்களையும் அனுபவிக்க இலங்கை வரும் உல்லாசப் பயணிகள், மனத்துக்கும் உடலுக்கும் கேடுவிளைவிக்காத பானத்தை விரும்பிப் பருகுவதற்கு எதிர்பார்க்கின்றார்கள். எமது நாட்டில்அவர்கள் விருப்பப்படியான மொக்டெயில்பானங்கள் தாராளமாகக் கிடைக்கின்றது. மாலைவேளைகளிலும் விடுமுறைப் பொழுதின்போதும்; ஹோட்டல் களுக்குச் செல்வோர், புத்துணர்ச்சி தரும் கடற்கரைக் காற்றைச் சுவாசித்தவாறு, மொக்டெயில் பானங்களை அருந்தி, இன்பமாகப் பொழுதைக் கழிப்பதற்கு எண்ணினால் அதற்கு இலங்கையை விட்டால் வேறொரு சொர்க்கபுரி கிடையாது.


இந்த மொக்டெயில்களில் பிரபல்யமாக நான்கு வகையான பானங்கள் கிடைக்கப் பெறுகின்றன. ஸ்ரீ லங்கன் லெமனேட், பிக்கார்டியா, கோகோலோலா, ஷன்ரஞ்ஜா ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.


அல்கஹோல் உள்ள மதுவகைகளான பியர், வைன், விஸ்கி, ரம், ஜின் போன்றவைகளுக்கு வௌ;வேறு அளவுகளிலும் வடிவங்களிலும் மதுக்கிண்ணங்கள் காணப்படுவதுபோல் மொக்டெயில் வகைவகையான பானங்களுக்கும் வௌ;வேறு வகையான, வௌ;வேறு அளவுகளில் கிண்ணங்கள் காணப்படுகின்றன.


ஒவ்வாமை இல்லாத, ஜெலற்றின் இல்லாத, செயற்கையான சுவையூட்டி களும் மணமூட்டிகளும் இல்லாத இயற்கையான பொருட்களைக்கொண்டு தயார்செய்யப்படுவதனால் அல்கஹோல் உள்ள மதுபானம் அருந்திய பின் ஏற்படும் எந்தவிதப் பின்விளைவுகளும் மொக்டெயில் பானம் அருந்தியபின் ஏற்படுவதில்லை.


மொக்டெயில் பானங்களை அருந்தும்போது, உன்னதமானதும் மேன்மையானதுமான சுவைகளை உணர்வதுடன், நாகரிகமும் கௌரவமும் நிறைந்த மனநிறைவான அனுபவங்கள் கிடைக்கப் பெறுகின்றன.


இக்கட்டுரைக்குத் தேவையான தகவல்களையும் செய்கைமுறைகளையும் பம்பலப்பிட்டி ‘ஓசோ' ஹொட்டலில், மொக்டெயில் பானத்தயாரிப்பில் அனுபவமும் நிபுணத்துவம் பெற்ற ஜே. ஜெரமி வழங்கியிருந்தார்.

ஸ்ரீ லங்கன் லெமனேட்

ஸ்ரீ லங்கன் லெமனேட் என்ற மொக்டெயில் பானம் எலுமிச்சைப்புல், தேசிக்காய்சாறு, இஞ்சிச்சாறு என்பவற்றுடன் தேன், ஐஸ்கட்டி என்பவற்றை மூலப்பொருட்களாகக் கொண்டு தயாரிக்கப்படுகின்றது. எலுமிச்சைப்புல்சாறு, தேசிக்காய்சாறு, இஞ்சிச்சாறு ஆகியவற்றை ஜஸ்துண்டுகளுடன் சேர்த்து, இரண்டு கிண்ணங்களினால் மூடி, நன்றாகக் குலுக்கி, ஒன்றாகச் சேர்க்கப்படுகின்றது. பின்னர் முட்டை வடிவ கிண்ணத்தில் ஊற்றி, லெமனெற், கரட்சாறு போன்றவை படைபடையாக கிண்ணத்தில்சே ர்க்கப்படுகின்றது. பின்னர் கொத்தமல்லி இலை, மிஞ்சி இலை, கறிவேப்பிலை, எலுமிச்சைத்துண்டு போன்றவற்றினால் கிண்ணம் அலங்கரிக்கப்படுகின்றது. குளிச்சியானதும் மென்மையானதும் புத்துணர்ச்சி தரும் பானமாக இது விளங்குகின்றது.

கோகோலோலா

~கோகோலோலா| பானவகையின் பிரதான சேர்மானப் பொருளாக, தேங்காய்ப்பால், இளநீர், ஸ்டோபரி முதலானவை கொண்டு தயார் செய்யப்படுகின்றது. இலங்கைக்கு வரும் உல்லாசப் பயணிகள் இளநீர் பருகுவதில் அதீத விருப்பம் கொண்டிருப்பர். அதன் குளிர்மையும் சுவையும் அனைவரையும் கவர்ந்ததாகும். அந்த இளநீருடன் மேலும் சுவையையும் சுகத்தையும் தரக்கூடியவாறு தயார் செய்யப்படும் ~கோகோலோலா| பானத்தை குளுகுளு தன்மையுடன் மெதுமெதுவாகப் பருகும்போது உடலில் புத்துணர்ச்சியும் பரவசமும் மெதுமெதுவாக பரவுகிறது.

பிக்கார்டியா

~பிக்கார்டியா| வகைப் பானத்தை சுவைப்போமானால், அது மெஜன்டா வகை சிவப்பு நிறத்தில் கண்ணுக்கும் நாவுக்கும் மூக்குக்கும் இரசனையளிக்கும் வண்ணம் திகழ்கின்றது. வத்தகப்பழம் எனப்படும் தர்ப்பூசணிசாறு, திராட்சைப் பழச்சாறு, நாரான்தோடைச்சாறு, பச்சைமிளகாய், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து தயாரித்து, முட்டைவடிவக் கிண்ணத்தில் பரிமாறப்படுகின்றது. இந்தக் கிண்ணத்துக்கும் மனதைக்கவரும் வகையில் அலங்காரம் செய்யப்படுகின்றது.

ஷன்ரஞ்ஜா

~ஷன்ரஞ்ஜா| மென்மையான இளஞ்சிவப்பு நிற வர்ணத்தில் பார்த்தவுடன் பருகிவிட மனதை தூண்டும் தன்மை வாய்ந்தது. இதற்கும் சேர்மானமாக தர்ப்பூசனிச்சாறும் தோடம்பழம், அன்னாசிப்பழச்சாறு, இளநீர் ஆகியவை பிரதான பொருட்களாகச் சேர்க்கப்படுகின்றன.

Mocktails are infusions of fresh fruits and sugary syrups that make for a refreshing non alcoholic sip. These delicious combinations are sought after for get-togethers and special occasions. In present times it has become an increasingly popular beverage. Drawing from Western and tropical flavours, the mocktail menu is continuously expanding with new inspired flavours, such as mixes of King Coconut, pineapple or passion fruit. Amidst the tropical climes of Sri Lanka, mocktails are an excellent remedy to beat the heat.