காண்போரைச் சுண்டியிழுக்கும் நாடக வடிவங்கள் சொக்கறி, கோலம், நாடகம
September 2018


சொக்கறியில் குருஹாமி, 'சொக்கறி', வேலைக்காரன் ஆகியோர் தோன்றும் காட்சி
Shamila Rajapakse

இலங்கையில் மிகவும் பிரபல்யமான மூன்று பாரம்பரிய நாடக வகைகள் காணப்படுகின்றன. அவையாவன சொக்கறி, கோலம், நாடகம் என்பவையாகும்.


எழுத்து: சுகந்தி சங்கர்

கிராமியக் கலை வடிவங்கள், அந்தந்தப் பிரதேச மக்களின் அறிவு, கலாசாரம், மதம், தொழில் என்பவற்றின் ஆக்கபூர்வமான பாதிப்புகளைப் பிரதிபலிப்பவையாகும். அவை ஆடல், பாடல், அவைக்காற்றும் முறை, உடை, ஒப்பனை, தரு மூலம் வெளிப்படுத்தப்படுகின்றன.


சொக்கறி
சொக்கறி நாடகம், காலாகாலமாக மலைநாட்டுக் கிராம மக்களின் கலை அம்சங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வந்துள்ளது. இருந்தபோதிலும் பிரதேசத்துக்குப் பிரதேசம் அரங்காற்றுகையிலும் கதைப்பின்னலிலும் கதாபாத்திரங்களிலும் வேறுபாடுகள் காணப்படுகின்றன.


பெரும்பாலும், அருவிவெட்டிக் கதிரடித்த நிலப்பரப்பில் அரங்கேற்றப்படும் நாடக வடிவமாகும். சொக்கறி நாடகம் ஒரு கதையை மட்டும் அடிப்படையாகக் கொண்டதாகும். இரவு உணவின் பின்னர் ஆரம்பமாகி விடியும் வரை தொடரும்.


உடுக்கு, கண்டிய மேளம், ஹொறனேவ ஆகிய இசைக் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆண் கதாபாத்திரங்கள் சாறமும் தோளில் சால்வையும் பெண் கதாபாத்திரங்கள் கண்டிய ஒசரிய சாறியும் அணிந்திருப்பர். பெண் கதாபாத்திரங்களையும் ஆண்களே நடிப்பார்கள்.


குருஹாமி, சொக்கறி, பராய (வேலைக்காரன்), கிராமிய மருத்துவர், சொத்தனா. ஹேட்டிய, தச்சன், பாம்பாட்டி கதாபாத்திரங்கள் முக்கியமானவையாகும். நாடகம் அரங்கேற்றப்படும் பகுதி கயிற்றால் எல்லையிடப்பட்டிருக்கும். அதன் நடுவில் நாட்டப்பட்ட கம்பத்தில் விளக்கு பொருத்தப்பட்டிருக்கும். அண்ணாவியார் கதாபாத்திரத்தை அறிமுகம் செய்யும்போது. குறித்த பாத்திரம் இந்த விளக்கு கம்பத்தைச் சுற்றி ஆடி விட்டுச் செல்லும்.


எந்தப் பிரதேசத்துக்குரியதாக இருந்தாலும் நாடகத்தின் கதையின் சுருக்கம் பின்வருமாறு அமையும். குருஹாமியும் சொக்கறியும் திருமணமான தம்பதிகள். அவர்களுக்கு குழந்தைப் பாக்கியம் இல்லை. அவர்கள், இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகிறார்கள். ஒருநாள், சொக்கறி அவ்வூரிலுள்ள விசக்கடி வைத்தியருடன் ஓடிப்போய் விடுகிறாள். கவலை கொண்ட குருஹாமி, தனது மனைவியைத் தேடி எல்லா இடமும் அலைகிறான்.


இறுதியில் கதிர்காமத் திருத்தலத்தை வந்தடைகிறான். கதிர்காமக் கந்தனின் அருளால் சொக்கறி கண்டுபிடிக்கப்படுகிறாள். குருஹாமி, தனது மனைவி செய்த தவறுக்குத் தகுந்த தண்டனை வழங்கிய பின்னர், மன்னித்து, அவளுடன் நீண்டகாலம் இல்லறம் நடாத்தினான் என்பதாகும்.


இந்நாடகத்தை அரங்கேற்றுவதன் மூலம் மக்களுக்கு வளமான வாழ்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை கிராம மக்களிடத்தில் இன்றும் உண்டு. இது பத்தினி தெய்வத்துக்கு நேர்த்தி வைத்து அரங்கேற்றப்படுகின்றது.


கோலம்
கோலம் கதாபாத்திரங்கள் அனைவரும் வேடமுகங்கள் அணிந்து தோன்றுவது, இந்நாடகத்தின் தனித்துவமாகும். காட்டுமா என்ற பாரம் குறைந்த மரத்தில், அழகாகவும் நுட்பமாகவும் செய்யப்படும் வேடமுகங்களுக்கு மஞ்சள், சிகப்பு, கறுப்பு போன்ற துலக்கமான நிறங்கள் தீட்;டப்பட்டிருக்கும். இந்த வர்ணங்களும் அலங்காரங்களும் பாத்திரங்களின் தன்மையைப் பிரதிபலிப்பனவாக அமைந்திருக்கும்.


மகாசம்பத என்ற அரசனின் பட்டத்து இளவரசி கருவுற்றிருந்த பொழுது, அவருக்கு ஒருபோதும் அரங்கேறாத கலைவடிவம் ஒன்றைக் காணவேண்டும் என்ற ஆசை உண்டானதாகவும் அதற்காக உருவாக்கப்பட்டதே கோலம் என்னும் ஆடல் வடிவம் ஆகும். இதனால், கிராமிய மக்கள் மத்தியில், இந்நாடகத்தின் மூலம் கர்ப்பிணிப் பெண்ணினதும் அவள் கருவிலுள்ள சிசுவின் நலன்களும் பாதுகாக்கப்படும், சுகப்பிரசவம் உண்டாகும் என்ற நம்பிக்கை ஆழமாக வேரூன்றியிருந்தது.


பண்டைக் காலத்தில் கோலம் நடிகர்கள் வேட முகமணிந்து ஆட, பாடகர் குழு கதையையும் கூறி பாடியும் வந்தது. காலப்போக்கில் கோலம் நடிகர்களே பாடி ஆடக்கூடிய வகையில் முக மூடியின் அமைப்பிலும் மாற்றங்கள் ஏற்பட்டதாக அறியமுடிகிறது.


கோலத்தில் பெரும்பாலும் தேவைக்கேற்ற வகையில் பாத்திரங்களைக் கூட்டவும் குறைக்கவும் முடியும். வீட்டு முற்றத்தில் அமைந்துள்ள வட்டமான அரங்கில் (தானாயம்பல) கோலம் ஆடப்படும். பார்வையாளர் அரங்கைச் சுற்றிவர இருப்பர்.

கற்பிணிப் பெண்ணுக்கும் அவள் கருவில் வளரும் சிசுவுக்கும், கோலம் நாடகத்தைக் காணும்போது, சுகமும் நலனும் கிடைப்பதுடன், சுகப்பிரசவத்துக்கான வாய்ப்புகளும் அருளப்படும் என்ற நம்பிக்கை இன்றும் உண்டு.


அரங்கின் முன்புறத்தில் மும்மணிகளுக்கு சிறப்பாக ஓரிடம் ஒதுக்கப்பட்டிருக்கும். கடவுள் வாழ்த்துடன் ஆரம்பமாகி, கோலம் நாடகம் உருவான வரலாற்றை கதைகூறுவோன் எடுத்துரைத்த பின்னர், முதலாவது காட்சியில் சபாபதி தோன்றுவர். இவர்கள் புத்தருக்கும் ஏனைய தெய்வங்களுக்கும் வணக்கம் சொல்லி, ஏற்பாட்டாளருக்கும் பார்வையாளருக்கும் வணக்கம் செலுத்தி, அளிக்கையில் தவறு நிகழுமாயின் பொறுத்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்வார். சபாபதி முகமூடி அணிவதில்லை.


சபாபதியினரை அடுத்து கோல ஆட்டம் ஆரம்பமாகும். முதலில் பொலிஸ் கோலம் முதல் முதலாளி கோலம் வரையுள்ள ஆடல்களும் பின்னர் அரசனும் பரிவாரங்களும் ஆண்டிகுரு ஆகியோரின் ஆடல்களும் இறுதியாக கதைகள் பொதிந்த கொண் கொட்டி கத்தாவ, சத்த கிந்துறு கத்தாவ, மனமே கத்தாவ, கம கத்தாவ, கோடாயிம்பற கத்தாவ போன்ற ஆடல்களும்; ஆடப்படும்.


நாடகம் (சிங்கள நாட்டுக்கூத்து)
சிலாபம் முதல் தங்காலை வரையுள்ள தென்மேற்குக் கடற்கரை பிரதேசங்களில் இந்தக் கலைவடிவம் பெரும்பாலும் ஆடப்பட்டு வந்தது. 18 ஆம் நூற்றாண்டில் தோன்றி 19ஆம் நூற்றாண்டில் பெருவளர்ச்சி பெற்றது. நாடகம் கூத்தின் தந்தையாக பிலிப் சிஞ்ஞோ கொள்ளப்படுகிறார்.


இலங்கையில் கத்தோலிக்க மதத்தைப் பரப்ப வந்த குருமார் அடிப்படை நாடக அறிவின் துணையுடன், தாம் மதம் பரப்பச் சென்ற இடங்களிலுள்ள பாரம்பரிய கலை வடிவங்களையும் உள்வாங்கி, மக்களைக் கவரும் விதமாக அரங்க அளிக்கைகளைச் செய்தனர்.


நாடகம் வடிவத்தில் அமைந்துள்ள அழகிய ஒப்பனைகள், ஆடை அணிகலன்கள், கவர்ச்சி மிக்க ஆடல்கள், பாடல்கள், சொல்லாடல்கள், இரசனையைத் தூண்டக்கூடிய வகையில் பின்னப்பட்ட கதைகள் இலகுவில் மக்களைக் கவர்ந்தன.


ஆரம்பத்தில் கத்தோலிக்க மதக் கதைகளே கையாளப்பட்ட போதிலும், பின்னர் புத்த சமயக் கதைகளும் அரிச்சந்திரா போன்ற புராணக் கதைகளும் வரலாற்றுக் கதைகளும், சமூகக் கதைகளும் நாட்டார் கதைகளும் நாடகம் வடிவத்தில் அரங்கேற்றப்பட்டன.கோவில் திருவிழாக்களை ஒட்டியே நாடகம் அரங்கேற்றப்படும். 6 மாதங்களுக்கு முன்னரே, கோவில் பங்குக்குரிய குரு, பூஜைவைத்து நாடகமவுக்குரிய கதை ஏட்டை ஏட்டண்ணாவியாரிடம் (பொத்தேகுரு) வழங்குவார். அவர் தான் தேர்ந்தெடுத்த நடிகர்களிடம் பிரதிகளை வழங்கி ஆடல் களையும் பாடல்களையும் பயிற்றுவிப்பார்.


வட்டமாகத் தடிகள் நடப்பட்டு, கயிறு கட்டி, மேலே குடில் போன்று கூரை அமைத்து வெள்ளை கட்டப்படும். களரியின் ஒருபுறத்தில் ஒப்பனைக்காக கொட்டில் அமைக்கப்பட்டிருக்கும். பார்வையாளர்கள் மூன்று புறமும் இருந்து பார்ப்பார்கள்.


நடிகர்கள் திரும்பப்பாடும் பாடலைப் பாடுவதற்கு ஏட்டண்ணாவியாரும் பிற்பாட்டுப் பாடுவோரும் அரங்கின் ஓரத்தில் நிற்பார்கள். மத்தளம் இசைக்கும் இரண்டு கலைஞர்களும் ஹொரணே என்ற குழலை இசைப்பவரும் கைத்தாளம் இடுபவரும் எதிர்ப்புறத்தில் அமர்ந்திருப்பார்கள்.


இன்றும் இந்த மூன்று கலை வடிவங்களுக் குள் நவீனம் புகுந்தாலும், இவை தமது தனித்துவத்தை இழந்துவிடாமலும் மரபிலிருந்து மாறுபடாமலும் மேலோங்கிச் செல்கின்றன.


Traditional Sri Lankan folk theatre consists of Sokkari, Kolam and Nadagam. These genres employ a great combination of engaging verses, songs and vivid gestures to narrate the story. Sokkari reveals the tale of beautiful Sokari, Guruhami and Pariya. Kolam is distinguished by the extensive use of masks. Based on a Buddhist Jataka, the plot revolves around a royal couple and the queen's desire to attend a masked performance. Nadagam is believed to be the first Sri Lankan theatre to originate during the 18th and 19th centuries by Pilippusinno, considered to be the father of Sinhala Nadagam.

 • image01
  image01

  வேடமுகங்கள் அணிவது 'கோலம்' நாடகத்துக்குரிய தனித்துவம்
  Shamila Rajapakse

  Prev Next
 • image01
  image01

  கவர்ச்சிமிகு ஆடை அணிகலன்கள், அழகிய ஒப்பனைகள், கலைத்துவமான பின்னணித் திரையலங்காரங்கள் 'நாடகம்' தில் மக்களைச் சுண்டியிழுப்பவை
  Poornima Meegammana

  Prev Next