இன்பம் பொங்கும் ஸ்பா சிகிச்சை
January 2019


'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' நோயற்ற வாழ்வில் உடல் நலனும் மனநலனும் முக்கியமானவை. இவை இரண்டுக்கும் அடிப்படை, நமது வாழ்க்கை முறை

எழுத்து: சுகந்தி சங்கர் | படங்கள்: மேனக அரவிந்த


கிழமை தோறும் தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் போன்ற எண்ணெய் வகைகளில் ஒன்றை, நன்றாக உடல் முழுவதும் தேய்த்து, சிறிது நேரம் ஊறவிட்டு, பின்னர் சீகைக்காய், வெந்தயம், செவ்வரத்தம்பூ, எலுமிச்சம்பழம், அரப்பு போன்ற பொருட்களை, உடல்முழுவதும் தேய்த்து, கிணற்று அல்லது ஆற்று நீரில் ஸ்நானம் செய்வது நமது மூதாதையர்களின் வழக்கமாக இருந்து வந்துள்ளது. இந்த வழக்கத்தால் அவர்கள் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் மனநலனும் பெற்று வாழ்ந்திருந்தார்கள்.


ஆனால், இயந்திர மயப்பட்ட வேகமான நகர வாழ்க்கை முறைமைகளுக்குள் மேற்குறிப்பிட்ட எண்ணெய்க் குளியலோ சாத்தியமற்றதாகவே பெரும்பாலானவர்களின் வாழ்க்கை முறை அமைந்துள்ளது. இது நகரவாழ்க்கை முறைமையின் தவிர்க்கமுடியாத கட்டாயம்.


நகர வாழ்க்கையில் உடலுக்கோ, உள்ளத்துக்கோ ஓய்வின்றி, ஓடிஓடி உழைப்பதனாலோ, அல்லது வாழ்க்கைப் பிரச்சினைகளாலோ உருவாகும் மனஅழுத்தம், சோர்வு, தூக்கமின்மை, கவனக்குறைவு, உடல்உபாதைகள் போன்றன மனிதனை நிரந்த நோயாளியாக்கி, மரணப்படுக்கையில் தள்ளிவிடும் ஆபத்துகள் நிறைந்துள்ளன.


எனவே, இன்றைய வேகமான வாழ்க்கை முறைமைகளுக்கேற்ப மனிதனை ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்வதற்கு வழிகாட்டும் வகையில் அமைந்துள்ளன, ஸ்பா ஆயுர்வேத சிகிச்சைகள். உண்மையில், இன்றைய காலகட்டத்தில் ஸ்பா சிகிச்சைகள் ஆடம்பரமானவை அல்ல; அத்தியாவசியமானவை.


அழகை மெருகூட்ட அழகுச் சிகிச்சைகள் உதவுவதுபோல், சோர்வடையும் மனத்துக்கும் உடலுக்கும் புத்துணர்வையும் ஆரோக்கியத்தையும் தருபவையாக, ஸ்பா ஆயுர்வேத சிகிச்சைகள் அமைகின்றன.


நல்ல தரமான ஸ்பா நிலையங்களில் ஒருவருக்கு எத்தகைய சிகிச்சை அளிக்கப்படவேண்டும்; எவ்வாறு அணுகப்படவேண்டும் என விஞ்ஞான பூர்வமாகப் பகுப்பாய்வு செய்து ஏற்றவகையான ஆலோசனைகளுடன் ஸ்பா அளிக்கப்படும். ஏனெனில், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் ஸ்பா சிகிச்சை அளிக்கப்படுவதுடன் அவரவர்களுக்கு ஏற்றவாறான பிரத்தியேகமான கிறீம், எண்ணெய் போன்ற இயற்கையான மூலிகை வகைகள் கையாளப்படுகின்றன.
ஸ்பா ஆயுர்வேத சிகிச்சை மேற்கொள்ளப்படும் இடம், பொதுவாக பூலோக சொர்க்கம் போன்றே காணப்படும். இரம்மியமானதும் அமைதியானதும் சுத்தமானதுமான சூழல், மனதை வருடும் நறுமணம் கமழும், இதயத்துக்கு இனிமையான இசை என சிகிச்சை மேற்கொள்ளப்படும் புறச்சூழல் காணப்படும்.


இந்தப் புறச்சூழல் முக்கியமானது; காரணம், ஸ்பா ஆயுர்வேத சிகிச்சையில் ஐம்புலன்கள் ஊடாகவும் சிகிச்சை வழங்கப்படுகின்றது. சுவைத்தல், பார்த்தல், கேட்டல், முகர்தல், தொடுகை போன்ற புலன்களினூடாகவும் சிகிச்சை அளிக்கப்படுவது இங்கு முக்கியத்துவம் பெறுகின்றது
ஸ்பா சிகிச்சை ஆரம்பமாவதற்கு சற்று நேரத்துக்கு முன்னர், மூலிகை பானம் வழங்கப்படும். இப்பானம் உடலில் வரட்சித் தன்மையைப் போக்குவதுடன் உடலில் நீர்ச்சத்தைப் பராமரித்து புத்துணர்வுக்கு வழி செய்கின்றது. இந்தப் பானம் சுவையுணர்வூடாக சிகிச்சைக்குப் பலனளிக்கின்றது.


சிகிச்சையின்போது மனதுக்கு ரம்மியமானதும் புத்துணர்வூட்டக்கூடியதுமான காதுக்கினிய இசை, இசைக்கவைக்கப்படும். வாத்தியக் கருவிகள் மூலமான இசை மட்டுமல்ல; அருவிகளின் சலசலப்பு, புல்லினங்களின் கீதம் எனச் சிகிச்சை பெறுபவரின் விருப்பப்படி, அவர் விரும்பிய மீடிறனில் இசைக்கப்படும். இசை அளப்பரிய சக்தி மிக்கது என்பது, இன்றைய விஞ்ஞான உலகில் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அது, நோய்களைக் குணப்படுத்தும் வல்லமை மிக்கது.


ஸ்பா சிகிச்சை அளிக்கப்படும் அறை அல்லது அதன் பின்புலம், பார்வைக்கு விருந்தளிப்பதாக இருக்கும். அழகிய ஓவியங்கள் வரையப்பட்டு, இரம்மியமான வர்ணங்கள் தீட்டப்பட்டிருக்கும். பயன்படுத்தப்படும் ஒவ்வொரு பொருட்களின் வர்ணங்களிலும் கவனம் செலுத்தப்பட்டு, பார்வை என்ற புலனுணர்வும் புத்துணர்வு பெறும்வகையில் அமையப்பெற்றிருக்கும்.


இயற்கைத் தாவரங்களில் இருந்து பிரித்தெடுக்கப்படும் பதார்த்தம் அல்லது எண்ணெய் ஊடாகப் பெறப்படும் நறுமணம், உடலையும் மனதையும் மிகப்பெரிய அளவில் மேம்படுத்துகின்றது. மூலிகைத் தன்மைகள் நிறைந்த நறுமணம், உடலில் நேர்மறை விளைவுகளைத் தூண்டி, நோய்கள் அணுகாமல் தடுக்க உதவுகிறது. அதாவது, மருத்துவக் குணம்கொண்ட நறுமணத்தை நுகரும்போது, அது மூளையின் செயற்பாட்டையும் மற்ற உடலியல் செயற்பாடுகளையும்
தூண்டுவதால் அமைகின்றது.


சருமத்தைப் பிடித்தல், நீவுதல், அழுத்தம் கொடுத்தல் ஊடாக தொடுகைப் புலன் விழிப்பூட்டப்படுகிறது. மனித உடற்கூற்றியல் அறிந்திருக்கும் ஸ்பா நிபுணருக்கு, உடலின் எப்பகுதியில், எவ்வளவு அழுத்தம் கொடுத்து அழுத்தினால் எத்தகைய புத்துணர்வு கிடைக்கும், எந்த வகையான நோய் தீரும் என கற்றுத் தேறி இருக்கிறார்கள். இத்தகைய சிகிச்சை தசை வலிகள், தசை பிசகுகள், சுளுக்கு இவற்றை நீக்கி, இரத்த ஓட்டத்தை அதிகரித்து, ஒட்சிசன் மற்றும் ஊட்டச்சத்துக்களை உடல் கிரகிக்க உதவுகிறது.


உடல், மனம், உணர்வு என அனைத்தையும் ஒருங்கிணைக்கும் இத்தகைய ஸ்பா ஆயுர்வேத சிகிச்சை முறை, இலங்கையில் 5,000 ஆண்டுகால பழைமை மிக்கதும், இலங்கைக்கே உரித்தான பாரம்பரிய ஆயுர்வேத வைத்திய முறைமைகளையும் அடிப்படையாகக் கொண்டமைந்துள்ளது. இலங்கை இயற்கை எழில், அழகு நிறையப் பெற்ற நாடு என்பதால் மட்டும் உல்லாசப் பயணத்துறை உலகப்பிரசித்தி பெற்று விளங்கவில்லை, மாறாக, இலங்கைக்கே உரித்தான பாரம்பரியங்களுடனும் விருந்தோம்ப லுடனும் கூடிய ஸ்பா ஆயுர்வேத சிகிச்சை பெறுவதற்காகவும் பெருமளவிலான உல்லாசப்பயணிகள் வருகை தருகிறார்கள்.


இக் கட்டுரைக்கு தேவையான தகவல்களையும் படங்களுக்கான உதவிகளையும் ஸ்பா சிலோன் நிறுவனத்தினர் வழங்கியிருந்தார்கள்.


In today’s fast-paced world, soothing spa treatments help relieve stress and calm the senses. Spa treatments focus on beauty treatments as well as relaxation and rejuvenation therapies. While paying tribute to the age-old Ayurvedic treatments used in ancient Sri Lanka, an emerging ‘Spa Culture’ is evident in the island today. Enhanced by a range of natural herbs and oils, spa treatments in Sri Lanka merge modern techniques with the ancient knowledge of Ayurveda. Ambience, décor, music, fragrance and even lighting are important elements that contribute to creating a multisensory, relaxing spa experience.


This article was compiled with information and photography support provided by Spa Ceylon.

 • image01
  image01

  உடல், மனம், உணர்வுகளை ஒருங்கிணைப்பது, 'ஸ்பா' ஆயுர்வேத சிகிச்சைகளின் சிறப்பும் தனித்துவமும் ஆகும்

  Prev Next
 • image01
  image01

  'ஸ்பா' சிகிச்சைகள் ஆடம்பரமானவை அல்ல, அத்தியாவசியமானவை

  Prev Next
 • image01
  image01

  சுவைத்தல், நுகர்தல், தொடுதல், பார்த்தல், கேட்டல் என, ஐம்புலன்களையும் புத்தூக்கம் பெறவைக்கும் இயற்கைவழி அணுகுமுறைகள்

  Prev Next