நீலக்கடலின் நடுவில் நீலத்திமிங்கிலங்கள் காண வாரீர்...
February 2019


டொல்பின்கள் உட்பட அரிய உயிரினங்களை மிரிஸ்ஸக் கடலில் கண்டுகளிக்க முடியும்

எழுத்து: சுகந்தி சங்கர்
படங்கள்: டீவு ஐஅயபநள


உலகம் பல அதிசயங்களாலும் ஆச்சரியங்களினாலும் நிறைந்துள்ளது. இவற்றை எங்கு, எப்படி, எப்போது கண்டுகளிக்கலாம் என்பதைப் பொறுத்தே, இவற்றின் சிறப்புகளையும் தனித்துவங்களையும் பிரமாண்டங்களையும் பெறுமதிகளையும் பூரணத்துவமாக அறிந்துணர முடியும்.


உலகத்தில் இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் உயிரினங்களில், தரையில் வாழும் யானைகளும் நீரில் வாழும் நீலத்திமிங்கிலங்களும் மிகப்பிரமாண்டமானவை என ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இவை இரண்டும் பாலூட்டி வகையைச் சேர்ந்த உயிரினங்களாகும்.


உலகத்தில் பிரமாண்டமான உயிரினங்களான யானை, திமிங்கிலங்கள் இவையிரண்டும் இலங்கையின் இயற்கை வளங்களாக அமையப்பெற்றிருக்கின்றன.


மனித சஞ்சாரமற்ற சமுத்திரங்களில் வாழும் திமிங்கிலங்களை, இலங்கைக்கு மிக அண்மித்த ஆழ்கடல் பகுதியில் உயிரோட்டமாகக் கண்டுகளிக்க முடிகிறது. இதனால், உலகத்தில் திமிங்கிலங்களைக் கண்டுகளிக்கக் கூடிய தலைசிறந்த இடங்களில் ஒன்றாக இலங்கை சிறப்புப் பெறுகின்றது.


இலங்கைத் தீவின் கீழ்ப் பகுதியில், அதாவது தென் பகுதியில், மிரிஸ்ஸ என்ற நகரத்தை அண்டியுள்ள ஆழ்கடற்பகுதியில் திமிங்கிலங்களின் நடமாட்டம் காணப்படுவது, இயற்கையின் விநோதங்களை அறிய விரும்புவோருக்கு வாய்ப்பாக அமைந்துள்ளது.


தலைநகர் கொழும்பிலிருந்து (சுமார் 150 கி.மீ) தூரத்தில் அமைந்திருக்கும் மிரிஸ்ஸ நகரும், அதனுடன் இருக்கும் கடற்கரையும் துறைமுகமும் தரைத்தோற்றம் மற்றும் அமைவிடத்தில் தனித்துவமாகத் திகழ்கின்றன.


இலங்கைத்தீவின் கீழ்ப் பகுதியில் இந்து சமுத்திரத்துக்குள் துருத்திக் கொண்டிருக்கும் நிலப்பகுதியான தெய்வேந்திரமுனைக்கு தெற்காக, குறுக்குப்பாட்டில், ஒதுக்குப்புறமாக, பிறைவடிவத்தில் மிரிஸ்ஸ என்ற அழகிய கடற்கரையும் துறைமுகமும் காணப்படுகின்றன.


இந்தத் துறைமுகத்தில் இருந்தே, திமிங்கிலங்களைக் காண்பதற்கான பயணம் ஆரம்பமாகின்றது. வெளிநாட்டு, உள்நாட்டு பயணிகள் இங்குள்ள படகுகளில் ஏறித் தமது பயணத்தை ஆரம்பிக்க முடியும். படகுகளுக்கான முன்பதிவுகளை இணையத்தளம் ஊடாகவோ, தங்கியிருக்கும் ஹோட்டல்கள் ஊடாகவோ, நேரடியாகவோ சென்று செய்துகொள்ள முடியும்.


பொதுவாக காலை ஆறு மணி முதல் ஏழு மணி வரையிலான காலப்பகுதியில் இங்கிருந்து படகுகள் புறப்பட்டு விடுகின்றன. காரணம், நண்பகலுக்குப் பின்னர் கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால், திமிங்கிலங்களைக் காண்பது அரிதாகிவிடுகிறது.


அரசாங்க அனுமதிபெற்றதும் முழுமையாக காப்புறுதி செய்யப்பட்டதும் நவீன தொலைத்தொடர்பு சாதன வசதிகள் பொருத்தப்பட்டதும் கொண்ட பாதுகாப்பான படகுகளைத் தெரிவு செய்து இருக்கைகளை முன்பதிவு செய்வதால், பயணம் திருப்திகரமாகவும் மகிழ்ச்சிகரமாகவும் அமையும். இத்தகைய படகுகளில் உயிர்காப்பு அங்கிகள், உயிர்காப்பு வளையங்கள், முதலுதவி மருந்துகள், காலைஉணவு, கழிப்பறை வசதிகள் கிடைக்கப்பெறுவதுடன், நன்கு பயிற்றப்பட்ட அனுபவம் மிக்க வழிகாட்டிகள் அல்லது படகுப் பணியாளர்களிடமிருந்து, கடலில் தோன்றும் உயிரினங்கள் குறித்த அரிய விளக்கங்களையும் கேட்டறிந்து கொள்ளும் வாய்ப்புகள் உண்டு.


கடலின் தன்மை, காலநிலையைப் பொறுத்து பயண நேரம் வேறுபடுகிறது. ஏறத்தாள மூன்று முதல் ஐந்து மணித்தியால (15 முதல் 20 கடல் மைல்கள்) பயணத்தின் பின்னர் திமிங்கிலங்கள் வாழும்; பகுதியை சென்றடைய முடியும்.


திமிங்கிலங்களின் நடமாட்டம் உள்ள பகுதியை அணுகும்போது, படகின் வேகம் குறைக்கப்பட்டு, இயந்திரங்களின் இரைச்சலும் குறைக்கப்படும். திமிங்கிலங்கள் பயணிக்கும் மார்க்கத்தில் இருந்து 300 அடி முதல் 100 அடி எட்டத்தில் இருந்தே காண முடியும். ஏனெனில், சர்வதேச திமிங்கில பாதுகாப்புச் சட்டங்களுக்கு அமைவாகவே, இப்பகுதியில் திமிங்கிலங்களைக் காண்பதற்கு அனுமதிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். கடலில் எந்தவொரு கழிவுப்பொருள் வீசுவதும் தடைசெய்யப்பட்டுள்ளது. இங்கு வாழும் பாலூட்டிகளின் வாழ்க்கைச் சூழலுக்குத் தீங்கு நேராத வண்ணம், பொறுப்புடன் செயற்படுவது ஒவ்வொரு பயணியினதும் பொறுப்பாகும்.


வருடத்தின் எல்லா நாள்களிலும் இங்கு திமிங்கிலங்களின் நடமாட்டங்களைக் காண முடியாது. ஒக்டோபர் மாத இறுதியில் இருந்து, ஏப்ரல் மாத இறுதி அல்லது மே மாத ஆரம்பம் வரையான காலப்பகுதியிலேயே திமிங்கிலங்களை இப்பகுதியில் காணமுடியும். டிசெம்பரில் இருந்து ஏப்ரல் வரைக்குமான காலப்பகுதி சிறப்பானதாகும். 98 சதவிதம் திமிங்கிலங்களைக் காணும் வாய்ப்பு உறுதிப்படுத்தப்படுகிறது.


மிரிஸ்ஸ கடற்பகுதி கண்டத் திட்டுக்கு மிக அண்மையில் அமைந்துள்ளது. இந்து சமுத்திரத்தின் சூடான நீரோட்டம், இந்தக் கண்டத்திட்டுக்கு நெருக்கமாகச் செல்வதாலும் திமிங்கிலங்களின் வலசப் பாதையில் இது அமைந்திருப்பதாலும் இங்கு அதிகளவான திமிங்கிலங்களையும் ஏனைய கடல்வாழ் பாலூட்டி உயிரினங்களையும் காணக் கூடியதாக இருக்கும். திமிங்கிலங்களின் இனப்பெருக்கத்துக்கு ஏற்ற சூழல் இங்கு காணப்படுவதாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. துருவப் பிரதேசங்களில் கடும்குளிர் நிலவும்போது, கடகக்கோட்டுப் பிரதேசங்களுக்கும் கடகக்கோட்டுப் பிரதேசங்களில் கடும் வெப்பம் நிலவும்போது துருவப் பிரதேசங்களுக்கும் திமிங்கிலங்கள் பயணிக்கின்றன. அவை பயணிக்கும் பாதையே வலசப் பாதை எனப்படுகிறது.


மிரிஸ்ஸப் பகுதியில் காணப்படும் திமிங்கிலங்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். பற்கள் கொண்டவை எனவும் பற்கள் அற்றவை எனவும் அவை வகைப்படுத்தப்படுகின்றன. நீலத்திமி;ங்கிலம் (25 முதல் 30 மீற்றர் நீளமும் ஒரு இலட்சத்து 80 ஆயிரம் எடையும் கொண்டது), ஸ்பெர்ரம் திமிங்கிலம் (உலகத்தில் மிகப்பெரிய பற்கள் கொண்டவை), பொட்டில்நோஸ் திமிங்கிலம், ஸ்பின்னிங் திமிங்கிலம் போன்ற 20க்கும் மேற்பட்ட திமிங்கில வகைகளையும் டொல்பின்கள், அரியவகை ஆமைகள், பறக்கும் மீன்கள், இராட்சதத் திருக்கை, சுறாக்கள் போன்ற கடல்வாழ் உயிரினங்களையும் இப்பகுதியில் காணமுடியும்.


இந்துசமுத்திரத்தின் ஆழமான கடற்பிராந்தியத்துக்கான பயணம், வாழ்நாளில் மறக்க முடியாத, உற்சாகம் தரும் அனுபவமாக அமையும் என்பது திண்ணம்.

 • image01
  image01

  உலகில் மிகப்பெரியதும் அரியதுமான உயிரினங்களைப் பார்க்கவும் படம்பிடிக்கவும் படிக்கவும் மிரிஸ்ஸ கடலில் முடியும்.

  Prev Next
 • image01
  image01

  ஆழ்கடல் அனுபவங்கள் வாழ்நாள் முழுவதும் மீட்டுப்பார்க்கும் சந்தர்ப்பம்

  Prev Next
 • image01
  image01

  திமிங்கிலங்கள் சுவாசிக்கும்போது...

  Prev Next
 • image01
  image01

  ஏறத்தாள 100 மீற்றர் ஆழத்தில் வாழும் இவை, 90 நிமிடங்களுக்கு ஒரு தடவை சுவாசிப்பதற்காக கடலின் மேற்பரப்புக்கு வந்து செல்கின்றன

  Prev Next