நாத வினோதங்கள் நடன சந்தோஷங்கள்
November 2018


பாய் விருந்தின் போது, பயன்படுத்தப்படும் இசைக்கருவிகள்

மகிழ்ச்சியையும் வசீகரத்தையும் தன்னிடத்தில் கொண்ட, பெதுரு பார்ட்டி (பாய் விருந்து - Pயனரசர Pயசவல) இலங்கையின் செழிப்பானதும் விசேட தன்மைகள் பொருந்தியதுமான வாழ்வியல் மற்றும் இசைக் கலாசாரம் ஆகியவற்றைப் பிரதிபலிக்கின்றது.


எழுத்து: சுகந்தி சங்கர் 
படங்கள்: சமில் மென்டிஸ்


இலங்கையிலும் வெளிநாடுகளிலும் வாழும் சிங்கள மக்கள் மத்தியில் 'பாய்விருந்து'க் கலாசாரம் பரவலாகக் காணப்படுகிறது. குறிப்பாக, சமூகத்தில் பொருளாதார நிலையில் நடுத்தர மேல் வர்க்கம் மற்றும் மேற்தட்டு வர்க்கம் ஆகிய நிலைகளில் வாழும் மக்களிடையே இந்த விருந்தோம்பல் பண்பாட்டு வாழ்வியல் செழிப்பாகக் காணப்படுகிறது.


உறவினர்கள், நண்பர்கள் ஒன்றுகூடி, பரஸ்பரம் தமக்கிடையிலான நட்புகளை, உறவுகளை, சொந்தபந்தங்களை நெருக்கமாக்கி, வலிமைப்படுத்துவதுடன் மகிழ்ச்சிகரமாகப் பொழுதைக் கழிப்பதாகவும் 'பெதுரு பார்ட்டி' அமைகின்றது.


நண்பர் வட்டம், தொழில்சார் நிறுவன ஊழியர், அமைப்புகளின் உறுப்பினர்கள், சொந்தபந்தங்கள் தமக்கு ஏதுவான தினம் ஒன்றைத் தெரிவு செய்து, பொதுவாக மாலைப்பொழுதில் குறித்தொதுக்கப்பட்ட ஓரிடத்தில் ஒன்றுகூடுவார்கள். இதன்போது, பலவகைப்பட்ட விருப்பமான உணவு, பான வகைகளை ஏற்பாடுசெய்வதுடன் தரையில் பாய் விரித்து, அதன்மேல் உட்கார்ந்து, தமக்கு விருப்பமான பாட்டுப்பாடி மகிழ்வித்தும் மகிழ்ந்தும் குதூகலம் கொள்வார்கள்.


பின்னணி இசையுடன் கூடவே, ஒவ்வொருவரும் தமக்கு விருப்பமான பாட்டுப்பாடி அல்லது கோரஸாகப் பாடி, அதனுடன் கூடவே சிலர் நடனமாடி மகிழ்ந்திருப்பர். பாய்விருந்தின் போது பாடுவதற்கென்றே பிரத்தியேகமாக பாடல்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவை பிரபல பாடலாசிரியர்களினால் எழுதப்பட்டு, பிரபல இசையமைப்பாளர்களினால் இசையமைக்கப்பட்டு, பிரபல பாடகர்களினால் பாடப்பட்டவையாகும்.பொதுவாக, மில்டன் மல்லவாராச்சியின் 'ஏத எப்பிட்ட", 'பியாபத் சலா", ஜோதிபாலவின் 'துறகதனயகின் மமஒப அமதமி", அமரசிறி பீரிஸின் 'ஹன்தானெட்ட பாயன ஸந்த", கிளரன்ஸ் விஜயவர்தனவின் 'மலட்ட பம்பரெக்கு ஸே" போன்ற பாடல்களும் பிரபல்யமானவையாகும். இவைதவிர பாடல்வரிகள் அடங்கிய புத்தகங்கள், இசைத்தட்டுகள் உட்பட ஆயிரக்கணக்கான பாடல்கள் இணையத்தளங்களில் காணப்படுகின்றன.


இந்தப் பாடல்கள் கருத்தாளம் மிக்கனவாகவும் மனித ஒழுக்க விழுமியங்களைப் பேணுபவையாகவும் காணப்படுகின்றன. இந்தப் பாடல்களுக்கு பின்னணியில் இசை இசைக்கப்படுவது முக்கியம். பொதுவாக தோல் மற்றும் நரம்பு வாத்தியங்கள் புல்லாங்குழல் போன்ற குழல் வாத்தியங்களும் உபயோகிக்கப்படுகின்றன. தற்காலத்தில் கீபோர்ட் மூலம் இசை இசைக்கப்படுகின்றது.


பாடல்கள் குத்தாட்டம் அல்லது துள்ளலாட்டம் கொண்ட பாடல்களாக இல்லாது, மெலோடி வகையைச் சேர்ந்தவையாக காணப்படுகின்றன. ஆனால், இந்த இசை தாளலயக் கட்டுகள் மிக்கவையாகவும் உற்சாகம் ஊட்டுபவையாகவும் நடனமாடத் தூண்டுபவையாகவும் காணப்படுகின்றன.


மேலும், இன்றைய வர்த்தக உலகில் பாய் விருந்துபசாரங்களைச் சிறப்பிப்பதற்கென இசைக்குழுக்களும் இயங்குகின்றன. இவர்கள் இசை தொடர்பான தேவையைப் பூர்த்தி செய்வதுடன் பாய் விருந்துக்கான ஏனைய தேவைகளையும் ஏற்பாடு செய்து உதவுகின்றனர். இவர்களுடனான தொடர்பு இன்டர்நெட் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும்.


'பெதுரு பார்ட்டி'யில் இன்னொரு முக்கியமான பொருள் இருப்பதற்குப் பயன்படும் பாய் ஆகும். இலங்கை மக்களின் வாழ்வியலில் பாய் ஒரு மங்கல அந்தஸ்துக்குரிய பொருளாகவே கருதப்படுகிறது. மூங்கில், கோரைப் புற்களால் பின்னப்பட்ட பாய்கள் பொதுவாகப் புளக்கத்தில் காணப்பட்டாலும், பிளாஸ்டிக் பாய்களும் தற்காலத்தில் பாவனையில் உண்டு. ஆனால், கோரை, மூங்கில் புற்பாய்கள் உடலுக்கு ஆரோக்கியத்தையும் குளிர்ச்சியையும் வழங்கும் தன்மை கொண்டன. இவற்றில் உறங்குவது, இருப்பது உடலக்கு நன்மை பயக்கும். பாயில் உட்கார்ந்து கால்களை நீட்டியோ அல்லது கால்களை மடக்கி சப்பாணி கொட்டியோ உறவுகள் அனைவரும் அருகருகே இருந்து மகிழ்ந்திருப்பதிலும் ஒருவகை அலாதியான சந்தோசம் இருக்கத்தான் செய்கின்றது.


பொதுவாக, 'பெதுரு பார்ட்டி' யின்போது அணியப்படும் ஆடைகளும் முன்கூட்டியே தீர்மானிக்கப்படுகின்றன. அநேகமாக, சிங்கள ஆடைப் பாரம்பரியத்தைப் பின்பற்றியவையாக உள்ளன. பொதுவாக ஆண்கள் பருத்தி அல்லது பட்டுச் சாறத்தையும் மேலாடையாக அரைக்கை சேர்ட் சாறத்தின் வர்ணத்துக்கு ஒத்துபோகக் கூடிய வாறான வர்ண அலங்காரத்தையும் கொண்டிருக்கும். பெண்களும் இதேபோல் பாரம்பரிய ஆடை அலங்காரங்களைப் பின்பற்றுவர்.


'பெதுரு பார்ட்டி' விருந்துபசாரம் அண்மைக் காலத்தில் உருவானதாகக் கருதப்படுகின்றது. ஆனால், இத்தகைய விருந்துபசாரம் காலம் காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. இதற்கு 5,000 ஆண்டுகால பழைமையான வரலாறு உண்டு எனக் கூறப்படுகின்றது.


அதாவது, ஆண்களும் பெண்களும் சரிசமமாகப் பாயில் அமர்ந்திருந்து, பாட்டுப்பாடி உண்டு, குடித்து மகிழும் பாரம்பரியம் மன்னர்கள் காலம் முதல் பின்பற்றப்பட்டதற்கான வரலாற்று ஆதாரங்கள் உள்ளமையை அறியமுடிகிறது. பாயை மங்கலப் பொருளாக மதிக்கும் பண்பாடு, சிந்துவெளிக் காலம் முதற்கொண்டு காணப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக, வீட்டுக்குவரும் விருந்தினர்களை விசேடமாகக் கௌரவிக்கும் முகமாக பாய்விருந்துக் கலாசாரம் துளிர்விட்டதாகவும் அறியமுடிகிறது. இந்தியா முழுவதும் பரவியிருந்த இந்தக் கலாசாரம், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில், வரலாற்றுக் காலம் முதற்கொண்டு காணப்பட்ட பலவிதங்களிலான தொடர்புகள் ஊடாக, இலங்கையிலும் அறிமுகமானதாக, 'பெதுரு பார்ட்டி' குறித்து ஆய்வுகள் மேற்கொண்ட சிலர், தத்தமது கட்டுரைகளில் குறிப்பிட்டுள்ளனர்.


மகிழ்ச்சியையும் வசீகரத்தையும் தன்னிடத்தில் கொண்ட, 'பெதுரு பார்ட்டி' (பாய் விருந்து - Pயனரசர Pயசவல) இலங்கையில் செழிப்பானதும் விசேட தன்மைகள் அடங்கியதுமான இசைக்கலாசாரம் மற்றும் வாழ்வியல் ஆகியவற்றில் பிரதிபலிப்பதைக் காணலாம்.

 • image01
  image01

  'பெதுரு பார்ட்டி' கீதங்களுக்கு நரம்பு வாத்தியக் கருவிகள் முக்கியமானவை

  Prev Next
 • image01
  image01

  தோல் வாத்தியக்கருவிகளால் சிறப்புப்பெறும், 'பெதுரு' கீதங்கள்

  Prev Next