அறுசுவையுடைய அச்சாறுகள்
July 2014


இலையில் ஒரு சுண்டல், தேங்காய்ச் சம்பல், பருப்புக் கறி, மரக்கறி அச்சாறுடன் ஒரு சமவிகித உணவு

விபரம்: பவானி பாலா படங்கள்: தமித் விக்கிரமசிங்க


சுவையரும்புகளைச் சுண்டியிழுக்கும் புளிப்பும் காரமும் நிறைந்த வித விதமான அச்சாறுகள்! காய்கறிகளில்...பழங்களில்... பலவித நிறங்களில்...! பார்க்கும்பொழுதே நாவில் நீர் ஊறும். ஊறுகாயைப் போன்றே அச்சாறும் ஒருவகை உணவு பதனிடும் முறை. செய்முறைகளில் சற்றே வேறுபாடுகள் உண்டு. இலங்கையில் தயாரிக்கப்படும் அச்சாறு தனித்துவமானது.


மரக்கறி வகைகள் மட்டுமன்றி முற்றிய பழ வகைகளிலும் அச்சாறு செய்யும் வழமை இலங்கையில் மட்டுமே உள்ளது. மாங்காய் அச்சாறு, அம்பரெல்லா அச்சாறு, அன்னாசி அச்சாறு, வெரலு அச்சாறு, விளாங்காய் அச்சாறு மட்டுமன்றி அனைவரும் விரும்பும் பழக்கலவை அச்சாறும் உண்டு. மதியமோ மாலையோ நொறுக்குத் தீனியை உங்கள் நா தேடும்பொழுது பழக்கலவை அச்சாறு அதற்குச் சிறந்த உபசரிப்பாயிருக்கும். பலரும் தெரியாத விடயம் என்னவென்றால் பழமாக உண்ணும்பொழது கிடைக்கும் சுவையிலும் பார்க்க அவற்றை அச்சாறாகத் தயாரித்து உண்ணும்பொழுது கிடைக்கும் ருசியே அலாதி என்பது.


விற்பனை நிலையங்களில் கிடைக்கும் ரெடிமேட் அச்சாறைவிட வீட்டிலேயே தயாரிக்கும்பொழுது அதன் சுவை புதியதாக இருக்கும். அத்துடன் உங்களுக்கு விரும்பிய அளவில் சேர்மானப் பொருட்களை சேர்த்துக் கொள்ளலாம். அச்சாறு தயாரிக்கும்பொழுது இரண்டு முக்கிய விடயங்களைக் கவனிக்க வேண்டும். முதலாவது தண்ணீரோ அல்லது ஈரத்தன்மையோ இருக்கக்கூடாது.

இரண்டாவது பயன்படுத்தும் பாத்திரம் மட்பாண்டமாகவும் கரண்டிகள் மரத்தினாலானதாகவும் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அச்சாறு நீண்ட நாட்களுக்குக் கெடாமல் இருக்கும். இலகுவில் தயாரிக்கக்கூடிய சுவை மிகுந்த அச்சாறு வகைகளின் செய்முறைகள் சிலவற்றை உங்களுக்காக இங்கே தருகின்றோம்.


மரக்கறி அச்சாறு

சந்தையில் மரக்கறிகளின் விலை மலிவாக உள்ளவேளையில் பெரும்பாலான இல்லத்தரசிகள் அச்சாறு செய்யத் தவற மாட்டார்கள். தயாரிப்பதற்கு இலகுவானது மட்டுமன்றி மதிய உணவுக்கு விசேட கறி வகைககள் தயாரிக்க நேரம் கிடைக்காத பட்சத்தில் சுடு சோற்றுடன் பருப்புக் கறியுடனோ அல்லது தேங்காய்ச் சம்பலுடனோ சேர்த்து உண்ண அருமையாக இருக்கும். ஒரு நொடியிலேயே ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் மதிய உணவைத் தயார் செய்ய அம்மாக்களுக்குக் கைகொடுக்கவல்லது இந்த மரக்கறி அச்சாறு.

தேவையான பொருட்கள்
கரட் - 100 கி.
பயற்றங்காய் அல்லது பீன்ஸ் - 100 கி.
பப்பாசிக் காய் - 100 கி.
சின்ன வெங்காயம் - 100 கி.
பிஞ்சு மிளகாய் - 100 கி
கடுகு - 20 கி.
வினாகிரி - 50 மி.லீ.
உப்பு - தேவையான அளவு

செய்முறை
முதலில் காய்ந்த மண்பாத்திரம் ஒன்றில் பாதியளவு வினாகிரியில் உப்பு சேர்த்து கொதிக்க விடவும். அதில் நறுக்கிய கரட் துண்டுகளைப் போட்டு ஒரு நிமிடத்துக்கு மேற்படாமல் வேக விட்டபின் பின் வடித்தெடுத்து ஆறவிடவும். தொடர்ந்து பயற்றங்காய் (விரும்பினால் பீன்ஸ்) பாப்பாசிக்காய், சின்ன வெங்காயம், பிஞ்சு மிளகாய் ஒவ்வொன்றையும் தனித்தனியாக அவிய விட்டு எடுக்கவும். இறுதியாக மீதம் வைத்திருந்த வினாகிரியை பாத்திரத்தில் விட்டு மரக்கறி அனைத்தையும் ஒன்றாகக் கலந்து சில வினாடிகள் கொதிக்க வைக்கவும். இதனுடன் வினாகிரி கலந்து அரைத்து தனியாக எடுத்து வைத்த கடுகையும் சேர்த்தால் அச்சாறு தயாரித்து முடிந்துவிடும்.
இந்த அச்சாறை காற்றுப் புகாதவாறு இரு நாட்களுக்கு மூடிவைத்த பின்னர் பயன்படுத்திக் கொள்ளலாம். முறையாகப் பேணி வைத்தால் மரக்கறி அச்சாறை ஒரு மாத காலம் வரை வைத்திருக்க முடியும்.


அச்சாறு தயாரிக்கையில் தண்ணீரோ அல்லது ஈரத்தன்மையோ இருக்காது பார்த்துக் கொள்ள வேண்டும். இரண்டாவது, பயன்படுத்தும் பாத்திரம் மட்பாண்டமாகவும் கரண்டிகள் மரத்தினாலானதாகவும் இருக்க வேண்டும்.

மாங்காய் அச்சாறு

தேவையான பொருட்கள்
நன்கு முற்றிய மாங்காய் (பெரியது) - 1
சிவத்த மிளகாய்ப்பொடி - 1 தே.க.
வறுத்த கறித்தூள் - 1 தே.க.
சீனி - 1 தே.க.
மிளகுத் தூள்- 1 தே.க.
மரக்கறி எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் - 1 மே.க.
வினிகர் - 2 அல்லது 3 மே.க.
கடுகு - 1 தே.க.
உப்பு - தேவையான அளவு

செய்முறை
கழுவி ஈரம் காய்ந்த முற்றிய மாங்காயைத் தோல் நீக்கி (விரும்பினால் தோல் நீக்காமல்) சிறு கீலங்களாக வெட்டிக் கொள்ளவும். பின் அதனுடன் ஒவ்வொரு தேக்கரண்டி மிளகாய்ப்பொடி, வறுத்த கறித்தூள், மிளகுத் தூள், கடுகு, சீனி, எண்ணெய் ஆகியவற்றையும் 2-3 மேசைக் கரண்டியளவு வினிகரையும் சேர்த்து கலந்தால் மாங்காய் அச்சாறு தயார். புளிப்பு, இனிப்பு, காரம் நிறைந்த உண்ண உண்ணத் தெவிட்டாத இந்த மாங்காய் அச்சாறுக்கு வயது வேறுபாடு இன்றி ரசிகர்கள் உள்ளனர். மாலை வேளைகளில் நண்பர்களுடன் குதூகலமாகச் சுவைத்து மகிழ, பிரயாணங்களின்போது பசியெடுத்தால் சிற்றுண்டியாக உண்ண மற்றும் திரைப்பட வேளைகள், விளையாட்டுப் போட்டிகள் போன்ற உற்சாகம் ததும்பும் தருணங்களில் சிறந்த துணையாகவும் மாங்காய் அச்சாறு விளங்குகின்றது.


பழக்கலவை அச்சாறு

நன்கு கனியாத முற்றிய பழங்களை மட்டுமே இந்த அச்சாறு செய்யத் தெரிந்தெடுங்கள். ஏனெனில் பழங்கள் நீர்த்தன்மை உடையவையாக இருந்தால் அச்சாறை முறையாகத் தயாரிக்க முடியாது.

தேவையான பொருட்கள்
ஜம்புக்காய் - 4
காமரங்கா நடுத்தர அளவு - 1
அம்பரெல்லா - 2
வெரலு - 4
மாங்காய் - 1
வறுத்த மிளகாய்ப்பொடி - 1 தே.க.
வறுத்த கறித்தூள் - 1 தே.க.
சீனி - 1 தே.க.
மிளகுத் தூள் - 1 தே.க.
வினிகர் - 2 அல்லது 3 மே.க.
உப்பு - தேவையான அளவு

செய்முறை
ஜம்புக்காய், காமரங்கா, அம்பரெல்லா, மாங்காய் அனைத்தையும் சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். வெரலு காய்களை சிறு உரல் ஒன்றில் மெதுவாகத் தட்டி எடுத்துக் கொள்ளுங்கள். இவற்றுடன் மாங்காய் அச்சாறுக்குப் பயன்படுத்திய (எண்ணெய், கடுகு தவிர்ந்த) உள்ளீடுகளைக் கலந்து கொண்டதும் தான் தாமதம் அதனை ருசி பார்க்க ரெடியாக குட்டிக் குழந்தைகள் மேசையைச் சூழ்ந்திருப்பர். காமரங்கா, அம்பரெல்லா சேர்ப்பதனால் புளிப்புச் சுவை சற்று அதிகமாக இருக்கும். ஆகவே வினாகரியை தேவையான அளவு கலந்து கொள்ளுங்கள். பலவித சுவைகள் ஒன்றாகச் சேர்ந்து நாவின் சுவையரும்புகள் அனைத்தையுமே துள்ளியெழச் செய்யவல்லது இந்த பழக்கலவை அச்சாறு. காற்றுப் புகாதவாறு கண்ணாடிப் பாத்திரத்தில் அல்லது மட்பாத்திரத்தில் பாதுகாத்து வைத்தால் 2-3 நாட்களுக்கு வைத்திருக்கலாம்.


இந்த ஆக்கத்திற்கு வேண்டிய தகவல்களை Cinnamon Grand Colombo - 'Nuga Gama' உணவகத்தினர் வழங்கி உதவியிருந்தனர்.


This article features different types of Sri Lankan Achcharu.

 

 • image01
  image01

  மரக்கறி அச்சாறு செய்யத் தேவையான பொருட்கள்

  Prev Next
 • image01
 • image01
 • image01
  image01

  மரக்கறி அச்சாறைப் போன்றே விளாங்காய் அச்சாறையும் சோற்றுடன் உண்ணலாம்

  Prev Next
 • image01
  image01

  பழ அச்சாறு செய்யத் தேவையான பொருட்கள்

  Prev Next
 • image01
 • image01
 • image01
 • image01
  image01

  அனைவரும் விரும்பும் மாங்காய் அச்சாறு

  Prev Next
 • image01
 • image01
 • image01
 • image01
  image01

  பார்க்கும்பொழுதே நாவில் நீர் சுரக்கச் செய்யும் பழக்கலவை அச்சாறு

  Prev Next