‘இரத்தின துவீபத்தின்‘ வண்ணப் பொக்கிஷங்கள்
September 2012


விபரம் : பவானி பாலா படங்கள் : தமித் விக்கிரமசிங்க

இந்து சமுத்திரத்தின் முத்து என வர்ணிக்கப்படும் இலங்கைக்குக் காலனியாதிக்கத்துக்கு முன்னர் இருந்தே பல பெயர்கள் வழங்கப்பட்டு வந்துள்ளன. 'மணிபல்லவம்', 'இரத்தின துவீபம்' போன்ற பெயர்களில் புராதன இலங்கையை விளித்தமைக்கு வரலாற்று சான்றுகள் காணப்படுகின்றன. இந்தப் பெயர்களை ஆராய்ந்தால் மணி எனும் பதம் நவரத்தினங்களில் ஒன்றாகிய மாணிக்கத்தைக் குறிப்பதையும், இரத்தின துவீபம் எனும் பெயர் இரத்தினக்கற்கள் செறிவாகக் காணப்படும் இடத்தைக் குறிப்பதையும் ஊகிக்க முடிகின்றது. இரத்தினபுரி எனும் இடப்பெயருடன் இரத்தினக்கல் அகழ்வு தொடர்புபட்டிருப்பதையும் நாம் காணலாம்.

உலகில் காணப்படும் 150 வகையான இரத்தினங்களில் 100க்கு மேற்பட்ட வகைகள் இலங்கையில் கிடைக்கின்றன. இது மட்டுமன்றி இரத்தினம், முத்து, பவளம் முதலான செல்வங்கள் இலங்கையில் காணப்பட்டதாக மகாவம்சம் உள்ளிட்ட வரலாற்று இதிகாசங்கள் சான்று பகருகின்றன. இத்தகைய அரிய வளத்தைக் கொண்டுள்ள இந்தக் குட்டித் தீவிற்குக் கடலோடிகள், வணிகர்கள், அந்நிய நாட்டுப் படைகள் மட்டுமன்றி கி.மு 10ஆம் நூற்றாண்டில் சொலமன் மன்னன் வருகை தந்தமைக்கும் இந்தக் கனியவளமே முக்கிய காரணமாக இருந்துள்ளது.

இலங்கை இரத்தினங்களில் மிகப் பிரதானமானவை 'கொரன்டம்" எனும் குடும்பத்தைச் சேர்ந்த 'ஸபயர்' கற்கள். இவை நீலம், நீல வெள்ளை, சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு வர்ணங்களில் கிடைக்கின்றன. 'புளு ஸபயர்" எனப்படும் நீலக்கல் உலகளவில் மிகவும் பிரபலமானது. பண்டைய மன்னர் காலம் முதல் இன்று வரை இலங்கையின் நீலக்கல்லுக்குத் தனிமதிப்பும், அந்தஸ்தும், கௌரவமும் நிலவுகின்றன. இதன் உட்புறத்தில் வெண்ணிறத்தில் நட்சத்திரம் போன்ற ஆறு கோடுகள் தென்பட்டால் அக்கல்லை நட்சத்திர ஸபயர் ('ஸ்டார் ஸபயர்") என அழைக்கின்றார்கள்.

நீலக்கல்லுக்கு அடுத்தபடியாக சிவப்பு ஸபயர், மென்சிவப்பு ஸபயர், கிரிசொபெரில் வகையைச் சேர்ந்த அலெக்சன்ரைட், வைடூரியம் ('கட்ஸ் ஐ") முதலிய இரத்தினங்களும், கோமேதகம் ('கார்னட்ஸ்"), குவார்ட்ஸ் வகையைச் சேர்ந்த செவ்வந்திக்கல் அல்லது நாவல் பளிங்குக் கல் ('அமதிஸ்ட்") போன்றவையும் இலங்கையில் கிடைக்கும் தரமானதும், அரிதானதுமான இரத்தினக்கற்களாக விளங்குகின்றன. பவளம் ('கொரல்"), மரகதம் ('டோமலின்"), சர்க்கோன், சந்திரக்கல் ('மூன் ஸ்டோன்") போன்ற மதிப்பு மிக்க இரத்தினங்களும் இலங்கையில் காணப்படுகின்றன.

நம் நாட்டின் தரைத்தோற்ற அமைப்பின்படி 90 வீதமான பிரதேசம் இரத்தினக்கல் படிவுகள் உருவாகக்கூடிய 'பிரீ கம்பிரியன்" (கண்டங்கள் ஒன்றாக இருந்த காலப்பகுதி) பாறையினால் அமையப் பெற்றிருக்கின்றமை இயற்கையன்னையின் கொடை என்று கூறலாம். இரத்தினக்கல் படிவுகள் இலங்கையின் சப்பிரகமுவ மாகாணத்தில் அமைந்துள்ள இறக்குவானை, இரத்தினபுரி, குருவிட்ட, எகலியகொட, கிரிஎல்ல, பெல்மதுளை, பலாங்கொடை போன்ற பிரதேசங்களில் அதிகளவில் அமைந்துள்ளன. பொலநறுவை, பதுளை, அக்குரஸ்ஸ, தெனியாய, கதிர்காமம் போன்ற பரந்துபட்ட பிரதேசங்களிலும் இரத்தினக் கற்களின் வளம் காணப்படுகின்றது.

இரத்தினக்கல் அகழ்ந்தெடுத்தல் ஒரு வர்த்தக ரீதியிலான தொழில் முயற்சியாக ஆரம்பிப்பதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட பல அரிய வகை இரத்தினங்கள் உலகின் பல்வேறு பாகங்களையும் பல வழிகளால் சென்று அடைந்துவிட்டன. மன்னர்களின் கிரீடங்களை அலங்கரிக்கவும் ராணிகளின் அழகுக்கு அணி சேர்க்கவும் இலங்கையின் இரத்தினங்கள் கடல் கடந்து பயணித்துள்ளன. இவற்றில் குறிப்பிடத்தக்க சம்பவங்களாகக் கீழ்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.

இலங்கையிலிருந்து ஏற்றுமதியாகும் இரத்தினக்கற்களில் 60 வீதமானவை ஸபயர் வகைக் கற்கள். இதில் நீலக்கற்கள் மட்டும் 70 வீதம் அடங்குகின்றன.

உலகிலேயே மிகப்பெரிய நீலக்கல் 1907ஆம் ஆண்டு இரத்தினபுரியில் அகழ்ந்தெடுக்கப்பட்டது. 466 கரட் கொண்ட இந்த நீலக்கல் இன்று சர்வதேசப் புகழ்பெற்ற அமெரிக்க இரத்தினக்கல் கலை நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது. 423 கரட் கொண்ட லோகன் நீலக்கல் உலகின் இரண்டாவது நீலக்கல் ஆகும். ஐக்கிய அமெரிக்காவின் தேசிய மாணிக்கக்கல் சேமிப்பகத்தில் இக்கல் தற்பொழது பாதுகாக்கப்படுகின்றது. இலங்கையில் மட்டுமே கண்டெடுக்கப்பட்ட 150 கரட் வைடூரியக்கல் ('கட்ஸ் ஐ") பிரித்தானிய அரச குடும்பத்தின், குறிப்பாக எலிசபெத் மகாராணியின் சொத்தாக மாறியுள்ள பெருமையைப் பெற்றுள்ளது.

இதைவிட பிரித்தானிய இளவரசர் வில்லியம்ஸ், தனது மனைவி கேட் மிடில்டனுக்கு அணிவித்த திருமண மோதிரம் இலங்கையின் நீலக்கல்லைக் கொண்டது என்ற விடயம் உலகளாவிய ரீதியில் அதன் மதிப்பை உயர்த்தியதுடன் இக்கல்லின் சந்தைப் பெறுமதியிலும் தாக்கம் செலுத்தியதைக் குறிப்பிட்டுக் கூறலாம். இவற்றை விட 400 கரட் கொண்ட 'புளுபெல் ஸபயர், 393 கரட் கொண்ட 'ஸ்டார் ஒவ் லங்கா' போன்ற அரிதான இரத்தினங்கள் இலங்கையின் தேசிய இரத்தினம் மற்றும் ஆபரண அதிகாரசபையில் பாதுகாப்பாகப் பேணப்பட்டு வருகின்றன.

இரத்தினக்கற்களை அகழ்ந்தெடுத்தல், பட்டை தீட்டுதல், மெருகூட்டுதல், பெறுமதி சேர்த்தல் போன்ற பிற உற்பத்திக்குப் பின்னரான சேவைகள் சர்வதேச தரத்திற்கீடாக உள்நாட்டில் மேற்கொள்ளப்படுவதால் ஏற்றுமதிச் சந்தையில் இலங்கை இரத்தினங்கள் அதிக வரவேற்பைப் பெறுகின்றன. ஐக்கிய அமெரிக்கா, ஜப்பான், சீனா, பங்களாதேஷ், கொங்கொங், ஜேர்மனி, பிரான்ஸ், ரஷ்யா, இந்தியா போன்ற நாடுகளுக்கு இலங்கையிலிருந்து இரத்தினக் கற்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

தம்முடைய தோற்றத்திற்கு மெருகூட்டும் அணிகலனாகவே பெரும்பாலான மக்கள் இரத்தினங்களை விரும்பினாலும் பணப்பெறுமதி, அணிபவருக்குக் கிடைக்கும் நற்பலன்கள் முதலியவற்றுக்காகவும் இரத்தினங்களைப் பாதுகாக்கின்றனர். இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட ஆபரணங்கள் மேலதிக அழகையும் மதிப்பையும் பெறுகின்றன. ஸபயர் கற்களைப் பொதுவாக 18 கரட் தங்கம், மற்றும் வெண் தங்க ('வைட் கோல்ட்') நகைகளில் பதிக்கின்றார்கள்.கோமேதகம், புஷ்பராகம் போன்ற கற்கள் வெள்ளி ஆபரணங்களில் பயன்படுத்துவதற்குப் பொருத்தமானவை.

வெண் ஸபயர் கற்கள் வைரத்தைப் போன்ற பிரதிபலிப்பைக் கொண்டவை என்பதாலும் சிக்கனமானவை என்பதாலும் கைக்கடிகாரங்களில் பதிப்பதற்கு வைரத்திற்குப் பதிலீடாக இக்கல்லைத் தெரிவு செய்கின்றனர். ஸபயர் கற்களைத் தெரிவு செய்யும்பொழுது நீலக்கற்களில் பிற நிறங்களின் கலப்படம் இல்லாதவாறு தெரிவு செய்ய வேண்டும். தரமான ஸபயர் கற்கள் எந்த வெளிச்சத்திலும் தமது சுய நிறத்தை இழக்கமாட்டா.

இரத்தினக்கற்களில் வெப்பமூட்டுதல், கதிர்வீச்சு பாய்ச்சுதல் போன்ற முறைமைகள் மூலம் நிறமாற்றங்களை மேற்கொள்ள முடியும். ஆனால் இவற்றின் பணமதிப்பு சந்தையில் குறைவானது.

இலங்கையில் தரம் வாய்ந்த இரத்தினங்களைப் பரீட்சித்து அதற்கான உறுதிப்பத்திரம் வழங்கும் உத்தியோகபூர்வ நிறுவனமாக தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபை விளங்குகின்றது. இரத்தினக்கற்களைக் கொள்வனவு செய்ய விரும்பும் எவரும் இந்த சான்றுப் பத்திரம் வழங்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திய பின்னர் கொள்வனவு செய்வது சிறந்தது.

இந்த ஆக்கத்திற்கு வேண்டிய தகவல்களை இலங்கைத் தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபை வழங்கி உதவியிருந்தது.

This article features Sri Lankan Gems.

 

 • image01
  image01

  இலங்கை இரத்தினங்களின் கிரீடமாக விளங்கும் நீலக்கல்

  Prev Next
 • image01
  image01

  ெவ்வந்திக்கல் (அமதிஸ்ட்)

  Prev Next
 • image01
  image01

  கோமேதகம் (கார்னட்)

  Prev Next
 • image01
  image01

  மஞ்சள் ஸபயர்

  Prev Next
 • image01
  image01

  இரத்தினக்கற்களின் தரத்தைப் பரீட்சிக்கும் பல்வேறு கட்டங்கள்

  Prev Next
 • image01
  image01

  இரத்தினக்கற்களின் தரத்தைப் பரீட்சிக்கும் பல்வேறு கட்டங்கள்

  Prev Next
 • image01
  image01

  இரத்தினக்கற்களின் தரத்தைப் பரீட்சிக்கும் பல்வேறு கட்டங்கள்

  Prev Next
 • image01
  image01

  இரத்தினக்கற்களின் தரத்தைப் பரீட்சிக்கும் பல்வேறு கட்டங்கள்

  Prev Next
 • image01
  image01

  கிரிசொபெரில் வகையைச் சேர்ந்த ‘டைகர்ஸ் ஐ'

  Prev Next
 • image01
  image01

  மரகதம் (டோமலின்)

  Prev Next
 • image01
  image01

  ‘சர்க்கோன்'

  Prev Next