மௌனமொழி பேசும் வர்ணங்கள்
February 2017


கண்டிய மன்னர் காலத்தின் அருங்கலைகளின் செல்வாக்கைப் பறைசாற்றும் ~லாக்ஷா' அரக்கு கைப்பணிகள்


எழுத்து: சுகந்திசங்கர் | படங்கள்: மேனக அரவிந்த


இலங்கையின் முடியாட்சி வரலாற்றில் கடைசி இராசதானியாகத் திகழ்ந்தது கண்டி இராச்சியமாகும். போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் என அந்நியர்களின் படை எடுப்புகளை மூன்று நூற்றாண்டுக்கும்
மேலாக கண்டி இராச்சியம் வெற்றி கொண்டிருந்தது. இதற்குக் காரணம், கண்டி இராச்சியத்தைச் சுற்றிச் சூழ அமைந்திருந்த மலைகள் பாதுகாப்பு அரண்களாகத் திகழ்ந்தமையாகும்.


இதன் காரணத்தினால் கண்டி இராச்சியத்திற்குள் இலங்கைக்கே உரித்தான பூர்வீக மரபுகள், பண்பாடுகள், பாரம்பரியங்கள், அருங்கலைகள் போன்ற அரும்பொக்கிஷங்கள் அந்நிய நாட்டினரின் ஆதிக்க சாயல்கள் இன்றி, தனித்துவம் மங்காது, பாதுகாக்கப்பட்டன; மேலும் மெருகேற்றப்பட்டன. அதேபோல் இன்றுவரையில் அவை பாதுகாக்கப்பட்டு வருகின்றன.


இந்தவகையில் பஹலஹப்புவித என்ற கிராமம், பாரம்பரிய அரக்குக் கைப்பணிக் கைத்தொழிலில் இன்றுவரை சிறப்பிடம் பெற்றுத் திகழ்கின்றது. இலங்கையில் லாக்ஷா எனப்படும் அரக்குக் கைப்பணித் துறையில் இரண்டு கிராமங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. மற்றையது மாத்தறையிலுள்ள அகுல்மடுவ என்ற கிராமம் ஆகும்.


பஹலஹப்புவித என்ற கிராமம் மன்னர் காலத்திலிருந்து சிறப்புப் பெற்றுத் திகழ்கின்றது. ஆங்கிலேயர் ஆட்சியின்போது கூட, இந்தக் கிராமத்தையும் இங்கு தனித்துவமாக மேற்கொள்ளப்படும் அரக்கு அருங்கலைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் முதலியார் என்ற பதவிநிலையை ஒத்த, பிரதிநிதியை நியமித்திருந்தனர். அந்தளவுக்கு அவர்கள் இந்தக்கலைக்கும் இந்தக் கலைவினைஞர்களுக்கும் முக்கியத்துவம் அளித்திருந்தார்கள்.


இத்தகைய முக்கியத்துவம் மிக்க அந்தக் கிராமம், கண்டிக்கு வடக்கே, மாத்தளை நகரிலிருந்து சுமார் 24 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்திருப்பதுடன், நகர்ப்புறத்தின் ஆரவாரங்கள் எதுவுமின்றி அமைதியாக இயங்கிக் கொண்டிருக்கின்றது. தற்போது, இந்தக் கிராமத்தில் சுமார் 320 குடும்பங்கள் வரையில் வசித்தாலும் 185 வரையிலான குடும்பங்களே நேரடியாக இக்கைத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றார்கள்.


லாக்ஷா என்பது மரத்தினால் ஆன பாவனைப்பொருள்களுக்கு கண்ணையும் கருத்தையும் கவரும் வகையில், அரக்கு என்ற வர்ண மெழுகினால் அலங்காரம் செய்வதை அடிப்படையாகக் கொண்டதாகும். இந்த முறையில் வர்ணம் தீட்டுவதற்கோ அல்லது அலங்காரம் செய்வதற்கோ துரிகையைப் பயன்படுத்துவது கிடையாது.


தனித்துவ கலைத்துவ நுணுக்கங்கள் மிக்க இந்தக் கைவினைப் பொருட்களை வீடுகளில் வைத்திருப்பது, அந்தஸ்தும் அதிர்ஷ்டமும் மிக்கதாகக் கருதப்பட்டது. இன்றும் அவ்வாறு கருதப்படுகின்றது. லாக்ஷா என்ற கைவினைப்பொருட்களை லக்சல விற்பனை நிலையங்களிலும் நேரடியாக பஹலஹப்புவித கிராமத்துக்கு விஜயம் செய்வதன் மூலம், மலைகளால் சூழப்பட்ட குறித்த கிராமத்தில் கொள்ளை அழகை இரசிப்பதுடன், லாக்ஷா கைவினைப் பொருள்கள் செய்யப்படும் முறைகளையும் பார்வையிடலாம். இந்தக் கிராமத்துக்கு செய்யும் விஜயம், நினைவில் நீங்காத அனுபவமாக எப்பொழுதும் இருக்கும் என்பதுடன் எமக்குத் தேவையான பொருட்களை, தேவையான அளவுகளில், தேவையான வர்ணங்களில் விரும்பியவாறு செய்வித்துப் பெற்றுக் கொள்ளலாம்.


பொதுவாக, தற்போது லாக்ஷா அலங்காரம் செய்த பாவனைப் பொருள்கள் எனும்போது, நகைப்பெட்டிகள், வெற்றிலை பாக்குப்பெட்டி. ஆஷ்ரே, முட்டைப்பெட்டி, பென்ஷில்பேனா பெட்டி மற்றும் வரவேற்பறையில் வைக்கக்கூடிய அலங்காரப் பொருள்களையும் உள்ளடக்கலாம்.


கடினமற்ற மரங்களான கன்சூரியா, கினிசப்பு போன்ற மரங்கள் அரக்கு கைவினைக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. இதனை இலகுவாக உட்குடையக்கூடியதாகவும் அலங்காரங்களைப் புடைப்புச் செய்யக் கூடியதாகவும் இருக்கும். அத்துடன் இந்தமரங்கள் இப்பகுதியில் அதிகளவில் காணப்படுகின்றன. தேவைக்காக மரத்தை வெட்டும்போது, வேறொன்றை நடுகை செய்துவிடுகின்றார்கள்.

அரக்கு என்ற வர்ண மெழுகினால் அரங்காரம் செய்வதை அடிப்படையாகக் கொண்டதாகும். இந்த முறையில் வர்ணம் தீட்டுவதற்கோ அல்லது அலங்காரம் செய்வதற்கோ துரிகையைப் பயன்படுத்துவது கிடையாது.


பொதுவாக லாக்ஷா அலங்காரப் பொருள்கள், 3,4,5,6,7 அங்குலங்களில் அமைந்த அகலங்களிலேயே கிடைக்கப் பெறுகின்றன. எனவே மரக்கட்டைகளின் மருமனும் இத்தகைய அளவுகளில் அமைந்தனவாகவே தெரிவுசெய்யப்படுகின்றன. உதாரணமாக, ஐந்து அங்குல விட்டமுள்ள அளவிலான நகைப்பெட்டி ஒன்றைச் செய்வதாக இருந்தால், ஐந்து அங்குலத்துக்கும் சற்று அதிகமான மரக்கட்டை தெரிவுசெய்யப்பட்டு, அது உட்குடையப்பட்டு, அதற்குப் பொருத்தமான மூடியும் அதன்மேல், சிறிதும் பெரிதுமான வளையங்கள் போன்ற வடிவங்களில் புடைப்பு அலங்காரமாக செதுக்கப்படுகின்றது.


பின்னர் அரத்தாள் கொண்டு, சுத்தப்படுத்தப்படுகின்றது. பின்னர் தென்னம்பாளையின் காம்பின் பொச்சு கொண்டு சற்று மினுக்கப்படுகின்றது. அதன் பின்னர் முதலில் வெள்ளை அல்லது மஞ்சள் நிறத்திலான வர்ணம் பூசப்படுகின்றது. அதன் பின்னரே, மேற்பரப்பில் எமக்கு எந்த நிறம் தேவையோ அந்த வர்ணம் கொடுக்கப்படுகின்றது. நீலம், சிவப்பு, கறுப்பு வர்ணங்கள் வழமையானவையாகும். ஆனாலும் வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கு ஏற்றவாறான வர்ணங்களில் பொருட்கள் தயாரித்துக் கொடுக்கப்படுகின்றது. இந்த வர்ணத்தை மேலும் மினுமினுப்பாக்கும் வகையில், தென்னம்பாளையின் காம்புப் பொச்சு கொண்டு மெதுவாக உரசப்படுகின்றது. இதன் நோக்கம், புடைப்பாக வரையப்பட்ட, வளைய அலங்காரங்களின் புடைப்பு மற்றும் பள்ளப் பகுதிகள் அனைத்தினையும் பளபளப்பாக்குவதற்காகும். இதனை மேலும் பளபளப்பாக்கும் வகையில், ஈர்க்கு நீக்கிய தென்னம் குருத்தோலையை சிறிது நெருப்பில் வாட்டி எடுத்து, அதனால் உரசி மேலதிகமாகப் பளபளப்பாக்கப் படுகின்றது. இந்த வேலைகள் யாவும், துறப்பணப் பட்டடையில் வைத்தே மேற்கொள்ளப்படுகின்றன.


இது மிகவும் எளிய முறையில் அமைந்த பட்டடையாகும். துறப்பணமும் இரண்டு முனைகளில் தயாரிக்கப்படும் பொருளைத் தாங்கி நிற்கக்கூடியவாறான இரண்டு ஊசிமுனைகளும் இந்தப் பட்டடையின் முக்கிய பாகங்களாகும். துறப்பணத்தை முன்னுக்குப் பின்னாக அசைக்கும் போது ஊசிமுனையில் தாங்கி நிற்கும் பொருள் சுழல ஆரம்பிக்கும். இதன்போது, வர்ணம் தீட்டும் செயல்முறையும் அதன்பிறகு, அதனைப் பளபளப்பாக்கும் படிமுறையும் இந்தப் பட்டடையில் வைத்தே, செய்யப்படுகின்றது.


பின்னர் கூர்மையான கத்திமுனை ஒன்றினால் மெதுவாக, அலங்காரம் வரையப்படுகின்றது. இந்த அலங்காரங்கள் இலங்கையின் பூர்வீக பாரம்பரியங்களை வெளிப்படுத்துபவையாக அமைகின்றன. இவை உயிரினங்களின் உருவங்களாகவும் மலர்கள் மற்றும் வரிவடிவ அலங்காரங்களாகவும் அமைகின்றன. பொதுவாக, மலர்கள் மற்றும் வரிவடிவ அலங்காரங்கள் ஒரே மாதிரியானவையாக அடுத்தடுத்து வருபவையாகவும் உயிரினங்களின் உருவங்கள் அடுத்தடுத்து வருபவையாக அமைந்திருந்தாலும் உருவ வகைகளில் வேறுபாடுகளைக் கொண்டிருக்கும்.


இந்த அருங்கலையினதும் கிராமத்தினுடைய தோற்றம் குறித்த, சுவாரஷ்யமான கதை ஒன்று உண்டு. கண்டி இராசதானியில் 15 ஆம் நூற்றாண்டு முதல் 18 ஆம் நூற்றாண்டு வரையில் அருங்கலைகள் மற்றும் கைவினைப் பொருள்கள் முழுமையாக அரசகுலம் சார்ந்தோரின் கட்டுப்பாட்டிலேயே இருந்தன. வீட்டுப்பாவனைப் பொருட்கள் செய்பவர்களாகவும் மரத்தினாலான போராயுதங்கள் உற்பத்தி செய்வோராகவும் இவர்கள் வாழ்ந்தார்கள். 1630 களில் கண்டி இராச்சியத்தை ஆட்சி செய்த இரண்டாம் இராஜசிங்கன் இந்தியாவிலுள்ள அரக்கு அலங்காரங்கள்போல் தனது மாளிகையையும் அலங்காரம் செய்ய எண்ணி, குறிப்பிட்ட கைவினைக் கலைஞர்களில் பூசாப்பு என்பவரை அழைத்து அவரிடம் அந்த அலங்கார வேலைகளை பொறுப்பளித்தார். பூசாப்பு தன்னுடன் வேறு சிலரை கூட்டிச்சென்று, அந்த வேலையை பூர்த்திசெய்தார். இதனால் மகிழ்ந்த அரசன் தன்னுடைய அன்பளிப்பாக இந்த வளம்நிறைந்த கிராமத்தை பூசாப்புக்கும் அவருடைய பரம்பரைகளுக்கும் வழங்கியதாக வரலாற்றுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


வெளிநாட்டு உல்லாசப்பயணிகளோ அல்லது உள்ளுர் உல்லாசப்பயணிகளோ இத்தகைய பாரம்பரியங்களும் வரலாற்றுத் தனித்துவங்களும் நிறைந்த, அரும்பொருட்களைக் கொள்வனவு செய்து இந்த, அருங்கலை காலாதிகாலத்துக்கும் செல்வாக்கிழக்காமல் செழித்திருக்க வைத்திருப்பது ஒவ்வொருவரின் கடமையாகும்.


(இக்கட்டுரைக்குத் தேவையான தகவல்களை பஹலஹப்புவித கிராமத்தில் பரம்பரைபரம்பரையாக லாக்ஷா தயாரிப்பில் ஈடுபட்டுவரும் எல். ஜி. குமாரசிறி, சரத் மஹிந்த குமார ஆகியோர் வழங்கியிருந்தனர்)


Laksha, traditional Sri Lankan art carries its roots back to Kandy. The art is still practised in areas like Kandy and Matale where artists continue the skillful art. The wood ornaments are engrossed with lacquer that is produced from Lac infused in different colours. Plenty of ornaments, including walking sticks and decors are neatly embellished in creative designs.

 • image01
  image01

  உட்குடையப்பட்ட கினிசப்பு மரக்கட்டைகள்

  Prev Next
 • image01
  image01

  முதலில் மஞ்சளும் பின்னர் நீல வர்ணங்களும் தீட்டி, அலங்காரத்துக்கு ஏற்றவாறு நீல வர்ணம் நீக்கப்பட்ட லாக்ஷா கைப்பணி

  Prev Next
 • image01
 • image01
 • image01
  image01

  பட்டடையில் புடைப்பு அலங்காரம் செய்யப்படுகிறது

  Prev Next
 • image01
  image01

  பட்டடையில் மஞ்சள் வர்ணத்திற்கு மேல் சிவப்பு வர்ணம் தீட்டப்படுகிறது

  Prev Next
 • image01
  image01

  கூரிய ஆயதத்தினால் நுணுக்கமாக சிகப்பு வர்ணம் நீக்கப்படுகையில் மஞ்சள் வர்ணத்தில் தெரியும் அலங்காரம்

  Prev Next
 • image01
  image01

  அந்தஸ்தை வெளிப்படுத்தி அதிருஷ்டம் தரும் லாக்ஷா பொருள்கள்

  Prev Next