தர்மம் தலைகாக்கும் இந்த நம்பிக்கையின் வெளிப்பாடு 'தன்சல்'
May 2017


களைத்து வந்தோரின் பசியாற்றுவதினால்த்தான் தானங்களில் சிறந்தது அன்னதானம் எனப்படுகின்றது.
© Kanishka M Gunathunga

இலங்கை மக்களின் பாரம்பரியங்களும் அன்பான விருந்துபசாரப் பண்பும் 'தன்சல்' நிகழ்வுகளில் பிரதிபலிக்கின்றன.


எழுத்து: சுகந்தி சங்கர்


இலங்கைக்கு என்றொரு தனித்துவமான நற்பெயரும் நன்மதிப்பும் உலகத்தில் இருக்கிறது. அது பிரதி உபகாரம், எதிர்பார்ப்பு எதுவும் இல்லாத மகிழ்ச்சி கலந்த அன்பான, உபசாரமும் விருந்தும் ஆகும். இது எமது அன்றாட வாழ்வியல் பண்புகளுடன் இரண்டறக் கலந்தது. அயலில் ஒருவன் பசித்திருக்க, பார்த்திருப்பதில்லை. தமது நெருங்கிய உறவுகளின் இறந்த தினத்தை நினைவு கூரும் போது, ஏழைஎளியோர், அனாதைகள் போன்றவர்களின் பசியைப் போக்குவது முதல் உல்லாசப் பயணிகளாக இலங்கைவரும் வேற்றுநாட்டவர்களை உபசாரம் செய்வது வரையில், அதற்கென்றொரு பாரம்பரியமும் பண்பாடும் உண்டு. இலங்கை மக்களின் இந்த விருந்துபசாரப் பண்பு, வாழ்வியல் சடங்குகள், சமய வழிபாடுகளின் மூலம் சிறப்பாக வெளிப்படுத்தப்படுகிறது. இந்தப் பொதுப்பண்பு, இலங்கை வாழ் மக்களாகிய சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் ஆகிய மூவினத்தவரிடையேயும் காணப்படுகின்றது. ஏன் இலங்கையின் பழங்குடிகளாகிய வேடர்கள் மத்தியிலும் காணப்படுகின்றது. விருந்துபசாரத்தை சிங்கள மக்கள் ~தன்சல்| என்றும் தமிழ் மக்கள் அன்னதானம் என்றும் முஸ்லிம் மக்கள் கந்தூரி என்றும் அழைக்கின்றார்கள்.


பௌத்த சமயத்தைப் பெரும்பான்மையாகப் பின்பற்றும் சிங்கள மக்கள், தமது மதஅனுட்டானங்களின் போது விருந்துபசாரப் பண்பை மிகச் சிறப்பாகவும் நேர்த்தியாகவும் வெளிப்படுத்துகின்றார்கள். அவர்களுக்கு முழுமதி தினம் மிகவும் புனிதமானது. ஒவ்வொரு மாதத்திலும் வரும் அத்தினத்தை, இலங்கை அரசாங்கம் பொது விடுமுறைதினமாகப் பிரகடனப்படுத்தியுள்ளது. அத்தினத்தில் பௌத்தர்கள் பன்சல சென்று வழிபாடுகளில் ஈடுபடுவார்கள்.


ஆனால், கௌதமபுத்தர் பிறந்ததும், ஞானமடைந்ததும் இறந்ததும் ஆகிய மூன்று முக்கிய நிகழ்வுகளும் நிகழ்ந்த தினமாகிய வைகாசி (மே) மாதத்து நிறைமதி நாளிலேயே நிகழ்ந்தது. இதனைச் சிறப்பிக்கும் வகையில் பௌத்த மக்கள் வைகாசி மாத்தில் வரும் முழுமதி தினத்தை மிகச் சிறப்பாகக் கொண்டாடுவார்கள். அன்றைய தினமும் அதற்கு முன்னைய தினமும் அரசாங்கத்தினால் விடுமுறைதினமாகப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. அந்தளவிற்கு இலங்கையில் வெசாக் கொண்டாட்டங்கள் சிறப்பானதாகும்.


வெசாக் கொண்டாட்டத்தை மகிமைப் படுத்துவது, விருந்து உபசாரங்கள் அடங்கிய தன்சல் ஆகும். களைப்புற்றோரின் தாகத்தையும் பசியையும் தீர்ப்தே இந்த தன்சல் வழங்குவதன் நோக்கம் ஆகும்.


வரலாற்றுக் காலம் முதற்கொண்டு, இந்த தன்சல் வழங்கும் பண்பாடு காணப்படுகின்றது. வரலாற்றுக் குறிப்புகளிலும் கல்வெட்டுகளிலும் சுவர் ஓவியங்களிலும் காலம்காலமாக வழக்கத்தில் இருந்துவரும் பாரம்பரியங்களிலும் தன்சல் குறித்த விவரங்களைக் கண்டறிந்துகொள்ள முடியும்.

வெசாக் தினத்தன்று மாலைவேளையில் சுபநேரத்தில் அந்தந்த ஊர்ப்பெரியவர்கள், பிரமுகர்களினால் தன்சல்கள் திறந்து வைக்கப்படுகின்றன.


ஆரம்பகாலங்களில் வெசாக் தினத்தில் கௌதம புத்தரின் வாழ்கையினையும் அவரது போதனைகளின் தத்துவங்களையும் சித்திரிக்கும் வகையிலான ஊர்வலங்கள், அலங்காரக் காட்சிகள் இடம்பெறுவதுண்டு. இந்த அலங்காரக் காட்சிகள் ஊர்வலங்கள் யாவும் இரவு நேரத்திலேயே இடம்பெறும். நள்ளிரவில் தொடங்கி, பெருவெளிச்சம் தரும் விளக்குகள் ஏந்தி, அலங்கரிக்கப்பட்ட மாட்டுவண்டிகளில் பக்தி கீதங்கள் பாடிக்கொண்டு ஆண்களும், பெண்களும் செல்லும் அணிவகுப்பும் புத்தரின் வாழ்க்கைச் சம்பவங்களை எடுத்தியம்பும் அணிகளும் செல்லும். வெசாக் பந்தல்களின் உள்ளே, எண்ணை விளக்கு கொழுத்தப்பட்ட வெசாக்கூடுகள் ஆங்காங்கு கட்டப்பட்டிருக்கும். ஊர்வலம் செல்லும் பாதைகள் அழகாகச் சோடிக்கப்பட்டிருக்கும். அந்த ஊர்வலம் தரித்து நிற்கும் இடங்களில் பக்தர்கள் ஊர்வலத்தில் செல்பவர்களை உபசரிப்பார்கள். இந்த உபசாரத்தின்போது, இலவச உணவு, நீராகாரம், வெற்றிலை போன்றவை வழங்கப்பட்டன. இந்த தன்சல் வழங்கும் மரபு, சம்பிரதாயமாக ஆண்டாண்டு காலமாகத் தொடர்ந்து வருகின்றது.


காலமாற்றத்துக்கு ஏற்ப, வண்டில்மாடுகள் மோட்டார் வாகனங்களாகவும் எண்ணை விளக்குகள் மின்குமிழ்களாகவும் மாற்றங்கள் கண்டுவிட்ட போதிலும் தன்சல் வழங்கும் மரபில் மாற்றங்கள் ஏற்படவில்லை. இலவச உணவும் நீராகாரங்களும் போதுமான அளவிற்கு இன்றும் வழங்கப்படுகின்றன. மின்விளக்குகளினால் அலங்கரிக்கப்பட்ட தோரணங்களைக் கண்டுகளிப்பதற்கும் தத்தமது கலைத்துவம் மிக்க வினைதிறனை வெளிப்படுத்தும் வகையில் அமைந்த வெசாக் கூடுகளையும் (வெசாக் கூடுகளிடையே போட்டி வைத்து, பெறுமதியான பணப்பரிசில்கள் வழங்கப்படும்) கண்டுகளிப்பதற்கு நடந்தும் சொந்த வாகனங்களிலும் வாடகை வாகனங்களிலும் பஸ்களிலும் சாரைசாரையாக பக்தர்கள் வருவார்கள். களைப்படையும் மக்களுக்கு வீதிகளில் அமைக்கப்பட்டிருக்கும் பந்தல்களில் பானங்களும் தன்சல்களில் உண்ண உணவும் வழங்கப்படும்.


வெசாக் தினத்தன்று மாலைவேளையில் சுபநேரத்தில் அந்தந்த ஊர்ப்பெரியவர்கள், பிரமுகர்களினால் தன்சல்கள் திறந்து வைக்கப்படுகின்றன.
தன்சல்களில் முன்னைய காலங்களில், மரவள்ளிக்கிழங்கு அவியல், கடலை, பயறு அவியல், சோறுகறிகளும் பந்தல்களில் எலுமிச்சஞ்சாறு கலந்த சக்கரைத்தண்ணி போன்றவை வழங்கப்பட்டன. ஆனால் இன்று பந்தல்களில் குளிர்பானம், கோப்பி, தேநீர், ஐஸ்கிரீம் போன்றவை வழங்கப்படுகின்றன.


தன்சல்கள் பெரும்பாலும் அமைப்புகள், நிறுவனங்கள், பெரும்செல்வந்தர்களினால் ஏற்பாடு செய்யப்படுகின்றது. அமைப்புகள் ஊர்மக்களிடம் மற்றும் ஊரிலுள்ள செல்வந்தர்களிடம் பணம்திரட்டியும் நிறுவனங்களும் பெரும்செல்வந்தர்களும் நேர்;த்திக்கடனை நிறைவேற்றுவதற்காக தன்சல் வழங்குகின்றார்கள்.


தன்சல் வழங்கும் அமைப்புகளில் கண்டி பௌத்த சங்கம் என்ற அமைப்புத்தான் இலங்கையில் மிகவும் பெரியதும் பழைமையான அமைப்புமாகும்.


பௌத்த மக்களிடையே தன்சல் வழங்குவதன் முக்கியத்துவத்தையும் அதன் கட்டாயத்தையும் உணர்ந்துகொள்ளக்கூடிய வகையிலமைந்த, சம்பவம் ஒன்றை இங்கு அறிதல் தகும்.


1915 ஆம் ஆண்டு, மே மாதம், தன்சல் வழங்குவதற்கு கூடாரம் அமைப்பதற்கான அனுமதிகோரி, கண்டி நகர சபையிடம் கண்டி பௌத்த சங்கம் விண்ணப்பித்திருந்தது. முதற்தடவையாக அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. நகரசபை அளித்த விளக்கத்தின்படி 'அந்தப் பகுதியிலுள்ள கடைகளுக்கு தன்சல் முறையால், வியாபாரம் பாதிக்கப்படுகின்றமையால் இந்த அனுமதி இரத்துச் செய்யப்படுகின்றது" என்று அறிவிக்கப்பட்டது.


கடைகளுக்கு ஏற்படும் நட்டத்தைத் தான் பொறப்பேற்று அதனை வழங்கத் தயார் என்றும் தனசல் வழங்குவதற்கு கூடாரம் அமைக்க அனுமதிக்குமாறும் மீள்விண்ணப்பம் ஒன்று வள்ளல் ஒருவரினால் சமர்ப்பிக்கப்பட்டது.
இறுதியில் நட்டஈடு வழங்குவதற்கு வைப்புப் பணமாக ரூபாய் ஐம்பது செலுத்தப்பட்டு, அனுமதி பெறப்பட்டது.


செல்வந்தர்களும் வள்ளல்களும் தன்சல் வழங்குவதற்கு வாரிவாரி இறைத்தார்கள். இந்தப் பண்பு, அது தன்னுள் இன்னும் பல நல்ல அம்சங்களை உள்வாங்கிக் கொண்டு இன்றும் தொடர்கின்றது.


Dansels or free food stalls are part of Vesak when the crowds thronging streets to watch the night time decorations are regaled with everything from a paper cup of coffee to rice and curry, or even, sometimes, flowers for worshipping. Rich or poor, everyone stops by.

 • image01
  image01

  சமூக ஏற்றதாழ்வுகள் மறந்து ஒன்றாய்க் கூடியிருந்து விருந்துண்பதற்கு வழிவகுக்கும் 'தன்சல்'
  © Kanishka M Gunathunga

  Prev Next
 • image01
  image01

  'தன்சல்' உணவுக்கு என்றொரு தனித்துவமான சுவையுண்டு. வெளிநாட்டவர்களுக்கும்கூட அச்சுவையின் மகிமை தெரியும்.
  © Kanishka M Gunathunga

  Prev Next
 • image01
  image01

  வரலாற்றுக் காலம்முதல் தொடர்ந்துவரும் மரவள்ளிக்கிழங்கு 'தன்சல்' பாரம்பரியங்கள்

  Prev Next
 • image01
  image01

  வரலாற்றுக் காலம்முதல் தொடர்ந்துவரும் மரவள்ளிக்கிழங்கு 'தன்சல்' பாரம்பரியங்கள்

  Prev Next
 • image01
  image01

  உணவு, நீராகாரம், மலர் முதல் மண்ணெண்ணை வரையான 'தன்சல்' கள் இப்பொழுது வழங்கப்படுகிறது

  Prev Next