சந்திரவட்டக் கற்கள்
November 2017


அநுராதபுரம் அபயகிரி விகாரையில் உள்ள சந்திரவட்டக்கல்

எழுத்து: சுகந்திசங்கர்


ஐக்கிய இராச்சியத்திலுள்ள ~டெவோன்| நகரத்திலுள்ள வீடொன்றின் தோட்டத்தின் வாசலில் வைக்கப்பட்டிருந்த சந்திரவட்டக்கல் ஏலத்துக்கு வந்தது. இதன் ஆரம்ப விலை 30 ஆயிரம் ஸ்ரெலிங் பவுண்ஸ் என ஏலம் அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்தக் கல் 553,250 ஸ்ரெலிங் பவுண்ஸ்க்கு விலை போனது. இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன், மலைநாட்டில் தேயிலைத் தோட்டம் ஒன்றில் உரிமையாளராக இருந்த, பிரிட்டிஷ்காரர் ஒருவர், அநுராதபுரக் காலத்தைச் சேர்ந்த சந்திரவட்டக்கல் ஒன்றைக் கொள்வனவு செய்து, தனது தாய் நாட்டுக்கு எடுத்துச் சென்றிருந்தார்.


இத்தகைய உயரிய கலையம்சம் பொருந்திய சந்திரவட்டக்கல், அரசர்களின் அரண்மனை வாசற்படியிலும் பௌத்த வழிபாட்டுத் தலங்களின் வாசலிலும், பிக்குகளின் இல்லங்கள், சபைகூடும் மண்டபங்கள், நீர்நிலைகள் போன்றவற்றின் வாசல்களிலும் காணப்படுகின்றன.


வாசற்படிகளின் கீழ்ப்படிக்கல்லாகவும் அலங்கரிப்புக் கல்லாகவும் அரைவட்ட வடிவில் காணப்படும் சந்திரவட்டக் கல்லில் விலங்குகள், பறவைகள், செடிகொடிகள் போன்றவற்றின் உருவங்கள் ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளன. இவை பளிங்கு, கருங்கல்லில் வடிக்கப்பட்டிருக்கும்.


சந்திரவட்டக்கல்லின் சிற்ப அமைப்பு, உருவ வேறுபாடுகளை அடிப்படையாக வைத்து, அநுராதபுரக்காலம், பொலன்நறுவைக்காலம், கண்டிக்காலம் என வகைப்படுத்தலாம்.


அநுராதபுரக்கால சந்திரவட்டக்கல்

அநுராதபுரக்கால சந்திரவட்டக்கல்லின் நடுவில், அழகிய தாமரை மலர்களும் அதனையடுத்து கொடி அலங்காரத்தையும் தாமரை மொட்டுக்களைச் சொண்டினால் கௌவிபடி செல்லும் அன்னம், அதனையடுத்ததாக யானை, குதிரை, சிங்கம், எருது ஆகிய மிருகங்கள் ஒன்றன் பின் ஒன்றாகச் செல்வதையும் இறுதியில் தீச்சுடர் வடிவத்தையும் காணமுடியும்.


அநுராதபுரக்காலத்தை ஒத்த சந்திரவட்டக்கல் அபயகிரி விகாரை, ருவான்வெலிசாய விகாரை, ஸ்ரீமகா போதியிலும் காணமுடியும். ஏனைய சந்திரவட்டக் கற்களைவிட சிறப்பானதும் நேர்த்தியானதும் கலைநுட்பம் பொருந்தியதும் உயிர்த்துடிப்பு மிக்கதுமாக இவை காணப்படுகின்றன.


பொலன்நறுவைக்கால சந்திரவட்டக்கல்

பொலன்நறுவைக்கால சந்திரவட்டக்கல் பெரும்பாலும் அநுராதபுரக்கால சந்திரவட்டக்கல்லுடன் ஒத்திருக்க்pன்றது. இச்சந்திர வட்டக்கல்லின் நடுவே, தாமரை வடிவமும் கொடி அலங்காரமும் செதுக்கப்பட்டுள்ளன. முறையே, தனித்தனி வரிசையாக, 12 குதிரைகளும் 14 யானைகளும் 30 அன்னப்பட்சிகளும் தீச்சுடரும் சித்திரிக்கப்பட்டுள்ளன. பொலன்நறுவைக்கால சந்திரவட்டக்கல்லில் எருது நீக்கப்பட்டுள்ளமை கவனிக்கத்தக்கது.


கண்டிக்கால சந்திரவட்டக்கல்

அநுராதபுரம், பொலன்நறுவை கால சந்திரவட்;டக்கல்லிலிருந்து வேறுபட்டு, கண்டிக்கால சந்திரவட்டக்கல் முக்கோண வடிவில் அமைந்திருக்கிறது. இந்தச் சந்திரவட்டக் கல்லின் இரண்டு கீழ்ப்பக்க முடிவிடங்களிலும் ஒரே வகை அலங்காரமும் மேற்பக்க முடிவிடத்தில் சிறிய வட்டவடிவான அமைப்பும் உள்ளன. அவற்றில் சோழக்கதிர், கொடி, தாமரை இதழ் ஆகிய அலங்காரங்களை கொண்டு அலங்கரிக்கப்பட்டதாக இந்தவகைச் -சந்திரவட்டக்கற்கள் காணப்படுகின்றன. கண்டிக் கால சந்திரவட்டக்கல் களனி விகாரை, கண்டி தலதா மாளிகை ஆகிய இடங்களில் காணப்படுகின்றன.

சந்திரவட்டக்கல்லில் வாழ்க்கையின் தத்துவ விளக்கம் காணப்படுகிறது. வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டங்களின் முக்கிய அம்சங்களை நினைவூட்டிக் கொண்டிருக்கின்றன.


கண்டிக்காலச் சிற்பிகள் தமது தனித்துவம் மிக்க, பிரத்தியேகக் கலை பண்பாடுகளுக்கு அமைவாக, சுதந்திரமாக, தமது எண்ணங்களுக்கு அமைவாக புதிய வடிவில் சந்திரவட்டக் கற்களை அமைத்தமையும் இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கது. கண்டி, தெகல்தொறுவ விகாரையின் சந்திரவட்டக்கல் மிகச் சிறப்பான சிற்பநுட்பம் நிறைந்ததாகக் காணப்படுகின்றது.


சந்திரவட்டக்கல்லில் வாழ்க்கையின் தத்துவ விளக்கம் காணப்படுகிறது. வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டங்களான பிறப்பு, முதிர்ச்சி, இறப்பு, மறுபிறப்பு போன்ற முக்கிய அம்சங்களை நினைவூட்டிக் கொண்டிருக்கின்றன.


எடுத்துக்காட்டாக, அன்னப்பறவை பாலையும் நீரையும் பகுத்தறியும் தன்மைகொண்டது. அதேபோல் மனிதனும் தனது பகுத்தறியும் திறன்கொண்டு நன்மையையும் தீமையையும் வேறுபடுத்தி அறிந்துகொண்டு, சரியானதைப் பின்பற்ற வேண்டும் எனும் தத்துவம் வலியுறுத்தப்படுகிறது.


யானையின் உருவ அமைப்புகள், பிறப்பு, இறப்புச் சக்கரத்தை (மறுபிறப்பு நம்பிக்கை) உணர்த்துவதாக இருக்கிறது.


குதிரை என்ற உருவம் வாழ்க்கையில் முதிர்ச்சி என்பது கட்டாயமானது என்பதையும் சிங்கம் நோய்நொடிகளையும் எருமை வாழ்க்கையை இயற்கையின் நியதிப்படி அமைத்துக்கொள் என்பதையும் வலியுறுத்துவதாகவும் அமைந்திருக்கின்றன.


செடி, கொடி, இலை ஆகியவற்றின் உருவங்களும் சந்திரவட்டக்கல்லை மேலும் மெருகூட்டக்கூடிய அலங்காரங்களாக அமைந்திருக்கின்றன.


புத்தரின் வருகைக்குப் பிற்பட்ட காலப்பகுதி கட்டுமானங்களிலேயே சந்திரவட்டக்கலின் செல்வாக்கு காணக்கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


(இக்கட்டுரை களனி பல்கலைக்கழக தொல்பொருள் திணைக்களத்தின் பேராசிரியர் பிரிஷான்த குணவர்தன வழங்கிய தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டது)


'The 'Sandakadapahana' or Moonstone is an exquisite aspect of ancient Sri Lankan art and sculpture. It represents the artistic skills and expertise of artists of a bygone era. Found mostly in notable historical sites of the Anuradhapura, Polonnaruwa and Kandyan period, the moonstones of each era differ in terms of pattern, motif and even shape. They are inspirational and symbolise the splendour of Sri Lankan art.

 • image01
  image01

  பொலன்நறுவை 'வட்டதாகே' யின் வாசலில் உள்ள சந்திரவட்டக்கல்

  Prev Next
 • image01
  image01

  கண்டி தலதா மாளிகையில் உள்ள சந்திரவட்டக்கல்

  Prev Next