தோரண நிர்மாணங்கள் சொர்க்கத்தின் நுழைவாயில்கள்
April 2018


கௌதம புத்தரின் பத்து உண்மைகள் அல்லது பத்து பூரணத்துவங்களை விளக்கும், தோரண நிர்மாணம்

எழுத்து: சுகந்தி சங்கர்


'வெசாக் தோரணம்" அல்லது 'வெசாக் பந்தல்" என்பது, வெசாக் வழிபாடுகளின் போது, கௌதம புத்தரின் வாழ்க்கை, பௌத்த தர்மத்தின் பண்பாடு, கலாசாரம் என்பவற்றை பொதுமக்களுக்கு இரசனையுடன் எடுத்துச் சொல்லும் ஏற்பாடாகும்.


இந்த ஏற்பாடு, ஏறக்குறைய கோபுரத்தின் தோற்றத்தை ஒத்த, அமைப்பில் ஓவியங்களினாலும் மின்குமிழ்களினாலும் அலங்காரம் செய்யப்பட்டு, காதுக்கும் மனதுக்கும் இனிய கவிநயத்துடனும் இசைநயத்துடனும் அமைந்திருக்கும். 'தோரணம்" நிர்மாணிக்கப்படும் இடங்களில் சுபீட்சம் பெருகும் என்பது நம்பிக்கை.


வெசாக் தோரணத்தின் முக்கிய நோக்கம், சுந்தரங்கள் நிறைந்த அழகானதும் வண்ணமயமானதுமான அனுபவத்தினூடாக பௌத்த தர்மத்தைப் பறைசாற்றுவதாகும்.


கமுகு மரத்தினால் (பாக்குமரம்) தோரணத்துக்கான ஆதரவு அமைப்பு நிர்மாணிக்கப்படுகிறது. தோரணத்தின் அளவைப் பொறுத்து ஏறத்தாள 200 முதல் 400 வரையான கமுகு மரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.


தோரணம் ஒன்றை நிர்மாணிப்பதற்கு முன்னர், ஐந்து அல்லது ஆறு பேர் கொண்ட நிபுணத்துவ கட்டமைப்பை உருவாக்குதல் வேண்டும். இந்தக் கட்டமைப்பில் பௌத்த, சி;ங்கள, கலாசார, பண்பாட்டுகளின் மீதான பட்டறிவு, உயர்ந்த கலைத்துவ படைப்பாற்றல், மின்னியல், இலத்திரனியல் நிபுணத்துவம் போன்ற திறன்கள் உள்ளோர் உள்வாங்கப்படுவார்கள்.


வெசாக், பொசன் என இரண்டு வழிபாடுகளின்போதும் தோரண அலங்காரங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. பொதுவாக, வெசாக் காலகட்டங்களில் நகர்ப்புறங்களில் பெருமளவு பணம் செலவு செய்யப்பட்டு நிர்மாணிக்கப்படும் தோரணங்கள், 28 நாட்கள் கழித்து வரும், பொசன் வழிபாட்டின் போது, கிராமப்புறங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, நிர்மாணிக்கப்படுவதும் உண்டு. வெசாக் தோரணத்தின் அளவைப் பொறுத்து, அதை நிர்மாணிப்பதற்கு தற்போது ஒரு மில்லியன் ரூபாய்களுக்கும் அதிகமாகச் செலவாகிறதாகக் கூறப்படுகின்றது.


வெசாக் காலங்களில் மிகப்பெரிய வெசாக் தோரணங்கள், தலைநகர் கொழும்பில் தொட்டலங்க, பேலியகொட, கொஸ்ஹஸ் ஹந்திய, புறக்கோட்டை, பொறள்ளை, இரத்மலானை, கங்காராமய போன்ற இடங்கள் உட்பட அனுராதபுரம், தம்புள்ளை, கண்டி, கம்பஹா போன்ற நகரங்களில் ஆண்டுதோறும் மிகப்பெரியளவில் நிர்மாணிக்கப்படுகின்றன. இன்றைய காலகட்டங்களில் நயினாதீவு, யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு போன்ற நகரங்களிலும் வெசாக் தோரணங்கள் நிர்மாணிக்கப்பட்டு மக்களால் இரசிக்கப்படுகின்றன.


தோரணம் ஒன்றின் ஆரம்பக்கட்ட வேலைகள் நான்கு மாதங்களுக்கு முன்பிருந்தே ஆரம்பிக்கப்பட்டு விடும்.


கமுகு மரத்தில்; தோரணம் அமைக்கும் முறை காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வந்த போதிலும், பாக்கு மரத்துக்கான தட்டுப்பாடு மற்றும் அவற்றைத் தறிப்பதற்கான சட்டரீதியான நடைமுறைகள் காரணமாக, தற்போது மூங்கில் மரங்கள் அல்லது இரும்;புக் குளாய்கள் பயன்படுத்தப்படுகின்றன.

தோரணத்தின் உச்சியில் அல்லது மையத்தில் வைக்கப்பட்டிருக்கும் கௌதம புத்தரின் திருவுருவத்தில் இருந்து, பலவர்ண ஒளிக்கற்றைகள் வெளிக்கிளம்பி, தோரணத்தின் வெளிப்புற ஓரங்களை நோக்கி, நகர்ந்து செல்வது போன்ற தோற்றப்பாடு இவற்றில் பிரதிபலிக்கும்.


தோரண நிர்மாணத்தின் போதான ஒவ்வொரு கட்டங்களிலும் சுபநேரம் பார்த்து, சங்கைக்குரிய மதகுருவினால் பிரித் சடங்கு நடாத்தப்பட்டே ஆரம்பிக்கப்படுவது மரபாகும்.


தூண்கள் நடப்படும் பொழுதும், மின்குமிழ் பொருத்தப்படும் பொழுதும், கௌதம புத்தரின் திருவுருவத்தின் முகத்திரை அகற்றப்படும்; பொழுது பிரித் சடங்கு அர்ப்பணம் செய்யப்படுவது மரபாகும்.


ஓவ்வொரு கோலங்களில் அமையப்பெற்ற பலகைகளில், ஓவியங்கள் வரையப்பட்டிருக்கும். இந்த ஓவியப்பலகைகள் ஓர் ஒழுங்கு முறைப்படி ஆதார அமைப்பான தொரணத்தில் பொருத்தப்படும். ஓவியங்களுக்கு முன்னாலும் ஓவியம் வரையப்பட்ட பலகைகளுக்கு இடையிலுள்ள இடைவெளிகளிலும் மின்குமிழ்கள் பொருத்தப்பட்டிருக்கும்.


தோரத்தின் உச்சியில் அல்லது மையத்தில் வைக்கப்பட்டிருக்கும் கௌதம புத்தரின் திருவுருவத்தில் இருந்து, பலவர்ண ஒளிக்கற்றைகள் வெளிக்கிளம்பி, தோரணத்தின் வெளிப்புற ஓரங்களை நோக்கி, நகர்ந்து செல்வது போன்ற தோற்றப்பாடு இவற்றில் பிரதிபலிக்கும். ஏறத்தாள இரட்டைப்பரிமாணத்தாக்கம் வெளிப்படும். ஏறத்தாள ஓரு தோரணத்தில் இருபத்தையாயிரத்துக்கும் அதிகமான மின்குமிழ்கள் பொருத்தப்படுகின்றன.


இவ்வாறு, ஓர் ஒழுங்குமுறையில் மின்னிமின்னி எரியும் பலவர்ண மின்குமிழ்களும் ஒலிக்க வைக்கப்படும் இசையும் பக்திமயமான சூழலை ஏற்படுத்துகிறது.


தோரணத்தில் இசைக்கவைக்கப்படும் இசை தனித்துவமானது. கவிநயம், சொல்நயம், இராகம், குரல் வளம், பின்னணி இசை இவை எல்லாம் இத்தகைய தனித்துவத்தையும் பக்திப்பரவசத்தையும் வழங்குகின்றன.


புத்தபிரானின் பிறப்பு, பரிநிர்வாணம், இறப்பு ஆகியவற்றை பாமர மக்களும் பகுத்தறிந்து கொள்ளும்விதமாக இரசனைபடக்கூறும் 550 ஐhதகக் கதைகள் உள்ளன. இந்தக் கதைகளில் ஒன்றைத் தெரிவுசெய்து, அதனைக் கருப்பொருளாகக் கொண்டே, தொரணத்தின் ஓவியங்கள் வரையப்படுகின்றன. இந்த ஓவியங்களை விளக்கும் வகையில் இசையுடன் கதை சொல்லப்படுகிறது.


தோரண நிர்மாணங்களுக்கு ஒலி, ஒளி அமைப்பு மூலம் வெகுஜன பிரபல்யத்தை மேர்வின் சேனரத்ன என்ற கலைஞர் 1961 ஆம் ஆண்டளவில் வழங்கியிருந்தார்.


இலங்கையில் முதலாவது தோரண நிர்மாணம், 1950 களில், குறிப்பாக 1955 இல் கொழும்பு 14, தொட்டலங்க என்ற இடத்தில் அமைக்கப்பட்டது. இதன் உயரம் 12 மீற்றர் ஆகும். தற்போது நிர்மாணிக்கப்படும் தோரண ஏறத்தாள 22 மீற்றர் உயரம் கொண்டவையாகும்.


(இக்கட்டுரைக்கான தகவல்களை பாளி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் செல்வி. வி. மல்லிகாதேவி தந்துதவியிருந்தார்.)


Vesak commemorates the birth, Enlightenment and passing away of the Buddha. In Sri Lanka, the streets are decorated with colourful Vesak decorations including lanterns of various sizes and designs. One of the most unique decorations are the large pandols, called Thorana in Sinhalese. It depicts a Jathaka Kathawa (story) from the Pansiyapanas Jathaka Potha, the Buddhist canon retelling the stories from the previous lives of the Gautama Buddha. Vesak pandols take various shapes and are illuminated elaborately. The stories are related in the background by a narrator. Spectacular pandols can be seen throughout the island during Vesak.

  • image01
    image01

    வெசாக் வழிபாடுகளில், பிரமாண்ட தோரண நிர்மாணத்தின் ஊடாக, பௌத்தத்தின் சிறப்புகள் பறைசாற்றப்படுகின்றன.
    BT Images

    Prev Next