இத்தாலியின் உணவுப் பாரம்பரியங்கள்
January 2018


Spaghetti வகை உணவு. இதனுடன் சிக்கன், பீவ், மரக்கறி, சீஸ் போன்றவையின் கூட்டைப்பொறுத்து உணவின் பெயர் மாறுபடும்

சமைப்பதும் உண்பதும் இரண்டு வகை ஆசிர்வாதங்கள்


எழுத்து: சுகந்திசங்கர்


மனிதன் உயிர் வாழத் தேவையான அடிப்படை உணவாகும். ஒவ்வொரு கால கட்டத்திலும், ஒவ்வோர் இடத்துக்கும் காலநிலைக்கும் பண்பாட்டுக்கும் ஏற்றால்போல் மனிதர்களுடைய உணவும், வாழ்க்கை முறையும் வேறுபடுகின்றன. இந்தக் காரணிகளை அடிப்படையாகக் கொண்டே, வௌ;வேறு வகையான உணவு வகைகளும் சுவைகளும் ஏற்படுத்தப்பட்டன.


உலகிலேயே அறுசுவை உணவை எடுத்துக்கொண்டால், இத்தாலி நாட்டுக்கு தனித்துவமும் பல்வேறு உணவு வகைகளின் முன்னோடி என்ற அந்தஸ்தும் காணப்படுகின்றது. வரலாற்றுக் காலத்தில் உரோம சாம்ராஜ்ஜியம் முதற்கொண்டு, இன்றைய இத்தாலி வரைக்கும் போற்றுதற்குரிய உணவுக் கலாசாரங்களும் பண்பாடுகளும் விழுமியங்களும் காணப்படுகின்றன.


இத்தாலிய உணவுகள் இரண்டு தடைவை ஆசீர்வதிக்கப்பட்டவை என அந்நாட்டு மக்களிடத்தில் ஆழமான நம்பிக்கையுண்டு. காரணம், அவை இரண்டு கலைகளின் சங்கமமாகும். முதலாவது சமைக்கும் கலை, அடுத்தது உண்ணும் கலை.


இத்தாலியர்களின் வாழ்வியலை எடுத்துக்கொண்டால், எந்த ஒரு செயற்பாடாக இருந்தாலும் அதில் ஒரு சடங்குமுறை இருக்கும். அத்துடன் மரியாதைப் பண்பாடு இருக்கும். எதிலும், எதையும் புதிதாகக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற துடிப்பும், ஆய்வு நோக்கத்துடன் அணுகும் மனப்பான்மையும் நிதானமும் ஆர்வமும் இருக்கும். ஆனால் பேராசை இன்றி! சராசரியாக இத்தகைய குணாம்சங்கள் இத்தாலியர்களின் சமைக்கும் கலையிலும் உண்ணும் கலையிலும் பிரதிபலிப்பதே உணவுத் துறையில் அவர்கள் உலகில் முன்னிலை வகிப்பதற்குக் காரணமாகும்.


ஒரு நாளின் ஆரம்பத்தில் காலை ஆகாரமாக எடுக்கும் உணவை எடுத்துக் கொண்டால், அது அன்றைய முழு நாளின் உணவுக்கான சிறுகுறிப்பைப்போல் அமைந்திருப்பதையும் அவதானிக்க முடியும். அத்துடன் ஷலாமி எனப்படும் இறைச்சி வகை உணவும் இத்தாலி மக்களுக்கு பிரியமானதாகும்.


சாதாரணமாக காலையில் கொனெட்டி, அல்லது ஒரு துண்டு பிரிஜோ போன்றவற்றை கப்புசினோ, எஸ்பிரஸ்ஷோ உடன் சேர்த்து அருந்துகின்றார்கள்.


மதிய உணவில் பிரான்ஷோ முக்கித்துவம் பெறுகின்றது. நாட்டுப்புறங்களில் தொழிலாளர்கள் மதிய உணவை அதிகளவில் உண்ணுகின்றார்கள். அவர்களுக்கு நாளின் முக்கியமான உணவு மதிய உணவுதான். இருந்தபோதிலும் நகர்ப்புறத்தில் மதிய உணவை எளிமையானதாகத்தான் உட்கொள்ளுகின்றார்கள்.


பொதுவாக மதிய உணவு மூன்று பகுதி களைக் கொண்டிருக்கும். அன்ரிபாஸ்ரோ (பசியைத் தூண்டுவது) பசியைத்தூண்டுவதற் கான பானம் அல்லது நொருக்குத்தீனி வகைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.


அடுத்ததாக பிரிமேபெய்ரோ (முதல் பீங்கான்) இதில், பாஸ்ரா வகை உணவு, சூப், சோறு ஆகியன இருக்கும். மூன்றாவதாக இறைச்சி அல்லது மீன் அடங்கியிருக்கும். மதிய உணவை ஏறத்தாள ஒரு மணித்தியால நேர அவகாசம் எடுத்துக்கொண்டே அருந்துவது இத்தாலியர்களின் பாரம்பரிய பழக்கமாகும். இறுதியில் உடனடிப் பழங்கள், ஐஸ்கிரீம் உட்கொண்டு, மதிபோசனத்தை நிறைவுசெய்து கொள்வார்கள்.


மாலையில் தேநீர் நேரத்தின்போது, கேக்கும் பேஸ்ரீசும் உள்ளடங்கியிருக்கும். இரவு உணவு சினா என அழைக்கப்படுகிறது. மதிய உணவு மூன்று பகுதிகளைக் கொண்டிருப்பது போலவே, இரவு உணவும் மூன்று பகுதிகளை உள்ளடக்கியுள்ளது.


இரவு உணவு வேளையின்போது, குடும்ப அங்கத்தவர்களோ அல்லது நண்பர்களோ ஒன்றாகக் கூடியிருந்து, அளவளாவிக் கொண்டே உணவை உட்கொள்வது இத்தாலியர்களின் பாரம்பரியமான வழக்கமாகும். அமெரிக்கர்கள், வடக்கு ஐரோப்பியர்களை விட, இத்தாலியர்கள் நேரம் தாழ்த்தியே மதிய, இரவு உணவு நேரங்கள் அமைந்திருக்கின்றன. பொதுவாக மதியம் ஒரு மணிக்குப் பின்னரும், இரவு நேர உணவு எட்டு மணிக்குப் பின்னருமாகவே இருக்கும்.


இலங்கையில் இன்றைய இளைஞர், யுவதிகளால் விரும்பி உண்ணப்படும் பீட்சா, பாஸ்தா போன்ற உணவு வகைகள், இத்தாலியிலிருந்தே உலகம் முழுவதும் பரவியதாக வரலாறுகள் தெரிவிக்கின்றன.


இத்தாலியில் பாஸ்தா மற்றும் அரிசி உணவுகள் மிகவும் பிரபலமானவை. லஸாக்னா, ஸ்பகெட்டி, புசுல்லி, லிங்குவின் ஆகிய பாஸ்தாநூடில்ஸ் உணவுகள் சோஸ், காய்கறிகள் மற்றும் சீஸ் சேர்த்து தயாரிக்கப்படுகின்றன. அரிசி, பட்டர், வைன், சீஸ் மற்றும் ஸ்டோக் கொண்டு சமைக்கப்படும் 'ரிசோட்டோ" இத்தாலியின் அற்புதமான உணவு வகையாகும்.


உலகில் இத்தாலிய உணவுகளுக்கு என்றொரு தனி இடம் உண்டு. சுவை, மணம், குணம், ஆரோக்கியம் போன்றவை தொடர்பில் தன்னிகரில்லாத் தன்மை கொண்டதனால், இன்று உணவு தொடர்பான உல்லாசப் பயணத்துறையில் இத்தாலி கணிசமான வருமானத்தை ஈட்டிவருவது குறிப்பிடத்தக்கது.


வாழ்க்கை என்ற சந்தத்தின் ஒரு பகுதியே உணவாகும்.


(இக்கட்டுரைக்குத் தேவையான தகவல்களை இத்தாலிய உணவுக்கலை நிபுணர் ஐ.பி.ஆர். பத்திரண வழங்கியிருந்தார்)


Italian cuisine is influenced by the seasonal availability of ingredients and differs by region. A traditional Italian meal begins with antipasti or appetisers. Pastas, pizzas and rice are called primos and are typically eaten for lunch or dinner. They are prepared with natural ingredients such as tomatoes, olive oil, a variety of seafood and meat. Italian dining includes a complementing range of coffee, degustation of wines and delightful desserts. Today, across the world and in Sri Lanka, Italian pizzas and pastas are extremely popular.

 • image01
  image01

  Spaghetti Bolognese தக்காளி, பீவ் சோர்ஸ், சில மூலிகைத் திரவியங்கள் சேர்க்கப்படும்

  Prev Next
 • image01
  image01

  இத்தாலிய சூப்

  Prev Next
 • image01
  image01

  பாண் பதப்படுத்தி, தூளாக்கி, சுவையூட்டப்பட்ட ஷலாமி இறைச்சி

  Prev Next
 • image01
  image01

  Ristotto Dipollo வகை இத்தாலிய உணவு

  Prev Next