'ஒஸரிய' கண்டி மணப்பெண் அலங்காரங்களும் நம்பிக்கைகளும்
February 2018


ஏழுவகை அணிகலன்களும் ஜொலிக்கும், 'ஒஸரிய' மணப்பெண் அலங்காரம்.
© Janana Yapa

‘ஒஸரிய' கண்டி மணப்பெண் அலங்காரங்களும் நம்பிக்கைகளும்


எழுத்து: சுகந்தி சங்கர்


தென் இந்திய நாயக்கர் அரசகுல மரபின் வழிவந்த இலங்கையின் கடைசி மன்னனாகிய ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனின் மனைவி, தன்னுடைய பட்டத்து இளவரசி என்ற அந்தஸ்தை வெளிப்படுத்தும் வண்ணமாக இத்தகைய பதக்க சங்கிலிகளை கண்டி அரசதானியில் அணிந்து வலம் வந்;தாள்.


அரசகுலத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் செல்வந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் தமது செல்வச்செழிப்பை வெளிப்படுத்தும் விதமாக, இத்தகைய கழுத்தணிகளை அணிந்தனர். இவை குடிசைக் கைத்தொழில்களாக அரச குடும்பங்களுக்கும் பெரும் செல்வந்தர்களுக்கும் தயாரிக்கப்பட்டன. பொற்கொல்லரின் கலைத்துவம் மிக்க அதியுச்ச படைப்பியல் திறனை வெளிப்படுத்தும் வகையில் இவை அமைந்திருந்தன.


கண்டி இராசதானியின் கலாசாரம், பாரம்பரியம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் வகையில் காணப்பட்ட பதக்க சங்கிலிகள், பௌத்த நெறிகளையும் மலைநாட்டின் அழகியல் அம்சங்களையும் மரபுகளையும் உள்வாங்கி, ஒஸரிய அலங்கார பதக்க மாலைகளாகப் பரிணாமம் பெற்றன. 19 ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்ட காலப்பகுதியில் ஒஸரிய பதக்க மாலைகள், மணப்;பெண் அலங்கார அணிகலன்களாக கண்டிய மணப்பெண் அலங்காரத்தில் உள்வாங்கப்பட்டன.

கண்டி இராசதானியின் கலாசாரம், பாரம்பரியங்களை வெளிப்படுத்தும் வகையில் அரசகுலம் மற்றும் செல்வந்தப் பெண்களினால் அணியப்பெற்ற, பதக்க சங்கிலிகள், காலப்போக்கில் மலைநாட்டின் மரபுகளை உள்வாங்கி 'ஒஸரிய' மணப்பெண் அலங்கார மாலைகளாகப் பரிணாமம் பெற்றன.


ஒஸரிய மணப்பெண் அலங்கார மாலைகள், விலைமதிப்பற்ற குடும்பச் சொத்தாக மதிக்கப்பட்டு, பரம்பரை பரம்பரையாகப் பாதுகாக்கப்பட்டு வருவது, அதன் மதிப்புக்குச் சான்றாகும். தாயினால் மகளுக்குக் கொடுக்கப்படும் சீதனத்தின் ஒரு பகுதியாக இந்தப் பதக்க மாலைகள் அடங்குகின்றன.


ஒஸரிய மணப்பெண் அலங்காரத்தில் ஏழு அணிகலன்கள் உள்ளடங்குகின்றன. இந்த ஏழு அணிகலன்களும் ஏழு தலைமுறைகளின் ஆசீர்வாதங்களைப் பிரதிபலிக்கின்றன என்பது, கண்டியச் சிங்கள மக்களின் ஆழமான நம்பிக்கையாகும். அத்துடன், இலக்கம் ஏழு அதிர்ஷ்டத்தைக் குறிப்பதாகும் என்ற நம்பிக்கையும் இருக்கின்றது. இவற்றைவிட, ஒஸரிய அணிகலன்கள் செல்வம், செழிப்பு, பெருமை, வலிமை, நல்வாழ்வு, ஒற்றுமை, நல்லொழுக்கம், ஆர்வம், வீரம் ஆகிய ஒன்பது பேறுகளையும் (நவபேறு) வழங்குகின்றன.


ஏழு மாலைகளில், தலையில் அணியப்படும் உச்சிப் பட்டம் உள்ளடங்கலாக ஐந்து மாலைகளுக்கு பதக்கங்கள் காணப்படுகின்றன. பதக்கங்களில் பொறிக்கப்படும் மிகவும் பிரபல்யமான அலங்காரங்களாக பூவிதழ் மற்றும் அன்னப்பறவைகள் பிரசித்தம் பெறுகின்றன. அன்னப்பறவை அலங்காரங்கள்
தூய்மையையும் அழகையும் வெளிப்படுத்தும் அடையாளமாகும். விசேடமாக கழுத்துகள் பின்னிய இரட்டை அன்னங்களின் அலங்காரமே ஒஸரிய மணப்பெண் மாலைகளில் பிரதானமும் பிரபல்யமானதுமாகும். இளம் சிவப்பு மாணிக்கம், நீல மாணிக்கம், மரகதம், முத்து, தங்கம், வெள்ளி போன்றவை கொண்டு மாலைகள் வடிவமைக்கப்பட்டிருக்கும். ஓஸரியவில் காணப்படும் ஏழு வகை அணிகலன்களும் பின்வருமாறு அமையும்.


சின்னத் தங்க மாலை

சின்னத் தங்க மாலைதான் மணப்பெண் தனது அலங்காரத்தின்போது முதலில் அணியும் மாலையாகும். இது கழுத்துடன் ஒட்டிக்கொண்டிருக்கும் நெக்லஸ் (கரபடி) வகையைச் சார்ந்ததாகும். பொதுவாக நான்கு பட்டு மாலைகொண்ட தடிப்பமாகவும் நடுவில் மலர்ந்த பூவிதழ் அலங்காரத்தையும் கொண்டிருக்கும்.


நான்கு பதக்க மாலை

நான்கு பதக்க மாலை என்பது நான்கு மாலைகளுடன் நான்கு பதக்கங்களும் சங்கிலிக் கோர்வையாகக் காணப்படும். மாலைகளும் பதக்கங்களும் அளவுகளில் சிறிதும் பெரிதுமாகக் காணப்படும். மணமகளின் விருப்பத்துக்கு இணங்க, பதக்கத்தில் அமையப்பெறும் அலங்காரங்கள் தீர்மானிக்கப்படும். பொதுவாக கழுத்துகள் பின்னிய அன்ன அலங்காரங்கள், பூவிதழ்கள் அமைகின்றன.


பாலக்க மலர் மாலை

பாலக்க மலர் மாலை என்பது நீண்டதாகவும் தங்க நிற மணிகளால் இளைக்கப்பட்டவையாகவும் இருக்கும்.

ஏழு தலைமுறைகளின் ஆசிர்வாதங்களைப் பெற்றுக்கொள்ளும் முகமாக, 'ஒஸரிய' மணப்பெண் அலங்காரத்தில், ஏழு அணிகலன்கள் அணியப்படுகின்றன. பதக்கங்களுடன் கழுத்தில் அணியும் ஐந்து மாலைகளையும் தலையில் அணியும் இரண்டு அணிகலன்களையும் உள்ளடங்கியுள்ளன.


அகஸ்தி மாலை

அகஸ்தி மாலை என்பது, உன்னதமான, தூயகற்கள் கொண்டு செய்யப்படுகின்றன. இப்பொழுது அதிகளவான மணமக்கள் வௌ;வேறு வர்ணம் கொண்ட மாணிக்கக்கற்கள் கொண்டோ, அல்லது முத்துகள் கொண்டோ அல்லது இரண்டையும் கலந்தும் உருவாக்கப்பட்ட அகஸ்தி மாலையை அணிகின்றார்கள்.


பெத்தி மாலை

பெத்தி மாலை என்பது, நுணக்கமான பூவிதழ் அலங்காரங்களுடன் மலர் மாலையைப் பிரதிபலிப்பதாகும். தனித்தனி மலர்களின் வடிவங்களை இணைத்த மாலையாகும். பெத்தி மாலை, ஏறத்தாள மணமகளின் முழங்கால் வரை நீண்டிருக்கும்.


நெத்திச்சுட்டி (நலல் பட்டிய)

கழுத்தில் அணியும் ஐந்துவகை மாலைகளுடன் நெத்திச்சுட்டியும் கரப்பட்டிய எனும் சூரியசந்திரர் முத்திரைகளும் அங்கம் வகிக்கின்றன. நெத்திச்சுட்டி மூன்று சங்கிலிகள் இணைந்ததாகவும் நடுவில் பதக்கம் கொண்டதாகவும் அமையும். நடு உச்சியில் ஒரு மாலையும் காதுகளுக்கு மேல் கன்னங்களைத் தழுவியதாக மற்றைய இரண்டு மாலைகளும் நெற்றியின் மேல் பதக்கம் தரித்ததாகவும் அமையும். திருமண நாளில் நல்ல நேரத்தில் தாயார், மணப்பெண்ணின் தலையில் நெத்திச்சுட்டியை அணிவித்து ஆசீர்வாதம் வழங்குவது மரபு.


கரப்பட்டிய (சூரிய சந்திர முத்திரைகள்)

தலையில் நெத்திச்சுட்டியினால் பிரிக்கப்பட்ட இரண்டு பக்கங்களிலும் சூரியன், சந்திரன் முத்திரைகள் அணியப்படுகின்றன. வட்ட வடிவத்தில் அமைந்த இந்த அணிகலன்களில் சூரியன் வலது பக்கத்திலும் சந்திரன் இடது பக்கத்திலும் அணியப்படும். சூரிய சந்திரர் இரண்டும் அழிவற்றதும் நிலைபேறான தன்மையும் கொண்டவையாக விளங்குவதால் திருமண வாழ்வும், நீடித்ததும் மகிழ்ச்சியானதும் நிலைபேறான தன்மையையும் கொண்டதாக அமையும் என்ற நம்பிக்கையின் வெளிப்பாடாகும்.


இவ்வாறு கண்டிய மணப்பெண் அலங்காரமாகிய ஒஸரிய அலங்காரத்தில் பல மாலைகள் அணியப்படுவதற்கான காரணம், தீய சக்திகளின் பார்வை மணப்பெண்மீது படாதிருப்பதற்காகும்.


(இக்கட்டுரைக்கான தகவல்களை 'அபிஷேக மண்டபய" நிறுவுநர் ருவான் விதானஹே தந்துதவியிருந்தார்)


The traditional Osariya and the Mala Hatha (seven chains), are culturally significant to Sri Lanka. The last queen to wear the Mala Hatha was the wife of King Sri Wickrama Rajasinghe. The seven necklaces are said to symbolise the blessings received from seven generations. The precious Udarata (up country) jewellery are family heirlooms that are passed down generations. Today too the tradition continues as the Osariya and Mala Hatha are worn by brides.